முக்கிய செய்திகள்

தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ.,

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      தமிழகம்
Marxist

 

சென்னை, பிப்.- 3 - 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுகிறது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று (முன்தினம்) அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு மாநிலங்களிலும் ஏப்ரல் 13 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. அதேசமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது முக்கிய பண்டிகை தினங்கள், மாணவர்களின் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்திற்கொண்டே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை முடிவு செய்யும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்தார். ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் தேதி மேற்கண்ட அம்சங்களை கணக்கிலெடுத்து அறிவிக்கப்படவில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு மார்ச் 28-​ந் தேதி துவங்கி ஏப்ரல் 11 அன்று வரை நடைபெறுகிறது. சுமார் 9 லட்சம் மாணவ ​ மாணவியர்கள் தேர்வு எழுதுகிறார்கள். பள்ளி இறுதித் தேர்வு நடைபெறும் காலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறுவது தேர்வு எழுதும் மாணவர்களை பெருமளவு பாதிப்பதோடு மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அமைந்து விடும். மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் இக்காலத்தில் பிரதானமாக தேர்வு பணிகளிலேயே ஈடுபட வேண்டியிருக்கும்.

எனவே, 9 லட்சம் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தலைமைத் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: