முக்கிய செய்திகள்

ஆர்.பி. உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்ட மாணவரணி கூட்டம்

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      தமிழகம்
udhaya 0

 

மதுரை,மார்ச்.3 - மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த  தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் உயிரை கொடுத்தாவது பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை முதல்வராக்கியே தீருவோம் என்றார். 

மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோட்டில் நேற்று நடைபெற்றது. புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் இளங்கோவன், மேலூர் தொகுதி செயலாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் தர்மராஜ், உசிலம்பட்டி தொகுதி செயலாளர் நீதிபதி, திருமங்கலம் தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, சோழவந்தான் தொகுதி செயலாளர் சி.பி.ஆர்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பி. பாண்டி வரவேற்றார். கூட்டத்தில் மாநில மாணவரணி செயலாளரும், மதுரை, விருதுநகர் மாவட்ட பொறுப்பாளருமான  ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம். முத்துராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே. ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தீர்மானத்தை விளக்கி மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இங்கு பிறந்த நாள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டிருந்தது. 6 தொகுதிகளை சேர்ந்த 6 ஏழை குடும்பங்களுக்கு பசுவும், கன்றும் வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 24 ம் தேதியே பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு விட்டது.. 

இந்த கூட்டத்தை ரத்து செய்து விடலாம் என்று முடிவு செய்த போது புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முதல் முதலாக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்ட கூட்டத்தை நடத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மாணவரணி சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

ஆளும் கட்சி குண்டர்களை விரட்ட படை தளபதிகளாக, சிப்பாய்களாக மாணவரணியினர் செயல்பட்டு வருகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தி.மு.க. ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி சாய்க்க மாணவரணி சூளுரைக்க வேண்டும். எங்கள் உயிரை கொடுத்தாவது ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்தியே தீருவோம். 

பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் மாணவரணியின் புறநகர் மாவட்ட செயலாளராக மாணிக்கத்தை நியமித்துள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பு கூட்டமாகவும் இது அமைந்துள்ளது. விட்டு விட்டு கரண்டை தரும் இருட்டு ஆட்சியை அகற்றிட அதி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். மாணவரணியினர் வரும் தேர்தலில் கடுமையாக வேலை பார்க்க வேண்டும். ஓட்டு சாவடிகளில் மாணவரணியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை சந்தித்து ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்து சொல்லி அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். தெருத் தெருவாக, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஓட்டளிக்க செய்ய வேண்டும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வந்தால் மாணவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. ஜெயலலிதா மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை செய்துள்ளார். இலவச பாடநூல், இலவச சைக்கிள் என மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி மாணவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. மாணவர்கள் விரோத அரசாகத்தான் உள்ளது. இந்த அரசை தூக்கி வீச மாணவரணியினர் சபதமேற்று இன்று முதலே உழைக்கத் தொடங்க வேண்டும் என்றார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஏப்ரல் 13 ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நிரந்தரமாக தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்த்திட இன்று முதல் ஊன் உறக்கம் பாராது இரவு பகல் பாராது அயராதுபாடுபட்டு வெற்றி சரித்திரம் படைத்திட கழக மாணவரணி புறநகர் மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் சூளுரை ஏற்கிறது. 

வரும் தேர்தலில் தி.மு.க.வினர் செய்யும் அனைத்து தில்லுமுல்லுகளையும் முறியடித்து ஜெயலலிதாவின் சாதனைகளையும் தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் அவலங்களையும் மற்றும் அனைத்து சட்டவிரோத செயல்களையும் தெருத்தெருவாக வீதி வீதியாக சென்று மக்களுக்கு எடுத்து கூறி மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை தமிழகத்தில் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்க அயராது பாடுபடுவோம். 

தென் மாவட்ட மக்களின் நலனுக்காக எதுவும் செய்யாமல் நாடாளுமன்றத்திற்கு செல்ல அஞ்சப்படுகிற மு.க. அழகிரியை இந்த தேர்தலில் மதுரையை விட்டு அப்புறப்படுத்திட இந்த கூட்டம் சூளூரை ஏற்கிறது. 

மாணவர்களின் நலனுக்காக ஆட்சியில் இருந்த போது எண்ணற்ற திட்டங்களை தீட்டி மாணவர்களின் வாழ்வு மேண்மையடைய செய்தும். தற்போது மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் அனைத்துசெயல்களை தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி  எப்போதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் மாணவர்களின் காவல் தெய்வம் ஜெயலலிதாவுக்குஇந்தகூட்டம் கோடானுகோடி நன்றியை தெரிவித்துகொள்கிறது. 

வரும் தேர்தலில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதாவால் அடையாளம்காட்டும்வேட்பாளர்களை இரவு பகல் பாராது அயராது தேர்தல் பணியாற்றி வெற்றி பெற செய்து வெற்றி கனியை ஜெயலலிதாவின் மலர் பாதங்களில் சமர்ப்பிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் அ.ம.பரமசிவம்,முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சி.  துரைராஜ், எம்.எல்.ஏக்கள் மேலூர் சாமி, ஏ.கே.போஸ், ஐ. மகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம். ஜெயராமன், எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் க. தவசி, முன்னாள் அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி தலைவர் சிவராமகிருஷ்ணா, மாணவரணி இணை செயலாளர் முத்துகிருஷ்ணன், மாணவரணி துணை செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் முனியசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரவீண்குமார், மாணவரணி துணை தலைவர் மகேந்திரபாண்டி, மாணவரணி இணை செயலாளர் கே.பி. பூமிநாதன், மாணவரணி துணை தலைவர்ஆர். கார்த்திக், கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: