முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு அமைச்சர் நன்றி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சாத்தூர், ஆக.10 -  சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெம்பக்கோட்டை, குகன்பாறை, செவல்பட்டி, ஆலங்குளம் பகுதிகளில் 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு அமைச்சர் உதயகுமார் நன்றி தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:​- என்னை சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். தொகுதி மக்களுக்கு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழக அரசு அறிவித்த நலத் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரச்செய்வேன். ஏழை, எளிய மக்களுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். உயர்த்திய முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், கறவை மாடுகள், ஆடுகள், மாணவர்கள் கல்விக்கு லேப்டாப், இலவச வீட்டுமனை பட்டா, பெண்களுக்கு தையல் இயந்திரம், மாணவர்கள் உயர்கல்விக்கு கல்விகடன், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, கிராமப்புறங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மயானச்சாலை வசதி, குடிநீர்வசதி, சாலை வசதி, பஸ் வசதி, பள்ளியில்லாத கிராமங்களில் பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிகளை தரம் உயர்த்துதல், வெம்பக்கோட்டை அணையை நவீனப்படுத்துதல், மருத்துவவசதி ஏற்படுத்தவும், படித்த  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள், ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வேன். அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி கிடைக்கவும், தொழிற்சாலைகள் அமைக்கவும், பஸ் பயணிகளுக்கு நிழற்குடை, புதிய பேருந்து வழித்தடங்கள், கிராமப்புற கோயில்களை சீரமைத்தல் மற்றும் பல திட்டங்களும் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும். என் சட்டமன்ற அலுவலகத்தில் தரப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு துரித நடவடிக்கை எடுத்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் என்னை எப்போது வேண்டுமானாலும், நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இரவு பகல் பாராமல் விருதுநகர் மாவட்ட மக்களுக்கும், சாத்தூர் தொகுதி மக்களுக்கும் தமிழக முதல்வரிடம் வளர்ச்சி திட்டங்களை தனி கவனம் செலுத்தி பெற்றுத்தருவேன். விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டில் சிறந்த மாவட்டமாக விளங்க அயராது பாடுபடுவேன் என்றார்.  மேலும் நான் நன்றி தெரிவித்த போது பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை, ரேஷன்கார்டு, தெருவிளக்கு, மயான சாலை தடையில்லா மின்சாரம், நூலகம் ஆகியவைகள் முக்கிய கோரிக்கை மனுக்களாக தரப்பட்டிருந்தது. அவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு சாத்தூரில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் காகித பூ அறிக்கைகளை தயார் செய்து 27 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். 

அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன், கடந்த மூன்றே மாதஆட்சியில் பல சாதனைகள் செய்துள்ளோம். சாத்தூரில் உயர்நிலைப்பள்ளி, மற்றும் பல்கலைக்கழக அரசு கலைக்கல்லூரி,  சாத்தூர் - சென்னை பஸ் சர்வீஸ் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு தரும் அனைத்து நல உதவிகளையும் தொகுதி மக்களுக்கு விரைவில் பெற்றுத்தர சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதிகாரிகள் உடன் கிராமத்திற்கு வந்து உடனடி தீர்வு கண்டு துரித நடவடிக்கை எடுக்க ஆவன செய்வேன். ஐந்து ஒன்றியங்களை சேர்த்து சாத்தூர் தொகுதியில் குடிநீர் பிரச்சனையை தாமிரபரணி மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தையும் விரைவில் கொண்டு வருவேன். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். 

இக்கூட்டத்தில் சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், முன்னாள் அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, சக்திகோதண்டம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சுப்புராம், வாசன், கெளரிநாகராஜன், சாத்தூர் வேலாயுதம், அம்மா பேரவை முனீஸ், இளைஞர் அணி சண்முககனி, கேபிள் கண்ணன், சாமி, சுப்புலெட்சுமி, ராமராசு, தாசன், கடம்பாறை ராஜ், காசிபாண்டியன், சுப்பிரமணியன், பொன்பாண்டியன், ஆலங்குளம் ஈஸ்வரி, வெம்பக்கோட்டை ராமராசு, செவல்பட்டி முருகன், முன்னாள் சேர்மன்  ரவிச்சந்திரன், அண்ணா பேரவை தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!