முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை பல்கலைக்கழக கல்வி இயக்குனருக்கு மிரட்டல்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை ஆக-10 - நெல்லை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் கல்வித்துறைக்கு புகார் கொடுத்த தொலைநெறி தொடர்கல்வி இயக்குனருக்கு கொலைமிரட்டல் விடுத்துவரும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை அருகேயுள்ள அபிஷேகபட்டியில் அமைந்துள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பி.எட். பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.  தொலைநெறி கல்வியில் பி.எட். படிப்பிற்கான வசதி ஒரு சில பல்கலைக்கழத்தில் மட்டுமே உள்ளதால் இந்த படிப்பில் சேர ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பி.எட். படிப்பில் சேர மிகவும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 2010-11ம் ஆண்டு பி.எட்.படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்குவதிலேயே முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் விண்ணப்பங்கள் வழங்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே அப்போது பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்து வந்த சபாபதி மோகன் பி.எட்.பிடிப்பிற்கு விண்ணப்பித்திருந்த 200க்கு மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு விதிமுறைகளுக்கு புற்பாக பி.எட். சீட் வழங்குமாறு பரிந்துரை செய்ததால் அவர்களுக்கு விதிமுறைகளுக்கு புறம்பாக சீட் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவிவந்த சூழலில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி துறை இயக்குனராக ஆர்.ரமேஷ் கடந்த 1.7.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தொலைநெறி தொடர் கல்வி இயக்கத்தில் பி.எட்.சீட் வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டறிந்து ஆதாரப்பூர்வமாக உயர்கல்வித்துறைக்கு புகார் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை இயக்குனரகம் நெல்லை பல்கலைக்கழகத்தில் நேரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி சென்றது. இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்த தொலைநெறி தொடர் கல்வி இயக்குனர் ரமேஷை மர்ம நபர்கள் சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்தால் கொலைசெய்வதாக மிரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தனக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்றும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூவை நேற்று மாலை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். இச்சம்பவம் நெல்லையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!