முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் வெற்றியை மழை தட்டிப் பறித்தது

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

செஸ்டர் லீ ஸ்டீட், செப்.- 5 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.  இங்கிலாந்து பயணத்தில், டெஸ்ட் தொடர் மற்றும் டுவெண்டி -20 போட்டி என அனைத்திலும் படுதோல்வியடைந்தது இந்திய அணி. இதனால் இவ்விரு அணிகள் மோதும் நாட் வெஸ்ட்  ஒரு நாள் போட்டித் தொடரின் மீது  அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 5 போட்டிகளைக் கொண்டது  ஒரு நாள் தொடர். இந்திய அணி ஒரு நாள் தொடரிலாவது மீண்டு எழும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த ஒரு நாள் போட்டி செஸ்டர் லீ ஸ்டீட் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் பீல்டிங்கை தேர்வு செய்தார். காயங்களால் துவண்டுள்ள இந்திய அணிக்கு மேலும் ஒரு இடியாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் காயத்தின் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக பார்த்தீவ் பட்டேலும், ரகானேவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி அற்புதமாக விளையாடியது. இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் சிரமப்பட்டனர். 16 ஓவர்களில் 82 ரன்களை இந்திய அணி எட்டியபோது ரகானே 40 ரன்களை எடுத்து பிராடின் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய ராகுல் டிராவிட் சர்ச்சைக்குரிய விதத்தில் பிராடின் பந்தில் அவுட்டானார். ஹாட் ஸ்பாட் முறையிலும் சரியாக தெரியாத அவுட் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஸ்னீக்கோ மீட்டரில் தெரிந்ததாக மூன்றாவது நடுவர் டிராவிட்டிற்கு அவுட் கொடுத்தார். இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்களுக்கு சாதகமற்ற முறையிலேயே மூன்றாவது நடுவரின் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. 87 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. அடுத்ததாக விராட் ஹோக்லி, பார்த்தீவ் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.  அணியின் எண்ணிக்கை 190 ஐ அடைந்தபோது சிறப்பாக விளையாடி 95 ரன்களை எடுத்த பார்த்தீவ் பட்டேல், ஆன்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பர் கீய்ஸ்வெட்டரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மாக கை விரலில் காயம் ஏற்பட்டதால் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து  சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அபாரமாக ஆடிக்கொண்டிருந்த விராட் ஹோக்லி அரை சதம் கடந்த நிலையில் பட்டேலின் சுழற்பந்தில் ஏமார்ந்து விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இந்திய அணி 39.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி நிதானமாக ரன்களை சேர்த்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 266 ஐ எட்டியபோது ரெய்னா 38 ரன்களை எடுத்த நிலையில் டெர்ன்பேட்ச் பந்தில் குக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். 272 ரன்கள் எடுத்த நிலையில் தோனி 33 ரன்களை எடுத்து பிரேஸ்னன் பந்தில் அவுட்டானார். அதற்கு அடுத்த பந்திலேயே பிரேஸ்னன் பந்தில் அஸ்வின் அவுட்டானார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்தது. பிரவீன் குமார் 2 ரன்களுடனும், வினய்குமார் 1 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிராட், பிரேஸ்னன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆன்டர்சன், டெர்ன்பேட்ச், பட்டேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு வைக்கப்பட்டது. துவக்க வீரர்களாக அலிஸ்டர் குக்கும், கீய்ஸ்வெட்டரும் களமிறங்கினர். இங்கிலாந்து 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் குக் 4 ரன்கள் மட்டுமே எடுத்து பிரவீன்குமாரின்  பந்தில்  போல்டானார். அடுத்து டிராட் களமிறங்கினார்.  அணியின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தபோது கீய்ஸ்வெட்டர் 6 ரன்களே எடுத்த நிலையில் குமாரின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். தொடர்ந்து இயான்பெல் களமிறங்கினார். இங்கிலாந்து அணி 7.2 ஓவர்களில்  2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை கொட்ட ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தியாவுக்கு  ஓரளவு சாதகமாக தெரிந்த இந்த போட்டி மழையின் குறுக்கீட்டால் தடைபட்டது ஏமாற்றமளித்தது. இவ்விரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி 6 ம் தேதி(நாளை) நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்