முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக் 20 - 20 கிரிக்கெட் மும்பை கடைசி பந்தில் த்ரில் வெற்றி

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு, செப்.- 28 - சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டிரினிடாட் டொபாக்கோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி -20 கிரிக்கெட் போட்டியில் உலகின் 10 முன்னணி அணிகள் கோப்பையை வெல்ல களமிறங்கியுள்ளன. இதில் தனது முதல் லீக் போட்டியில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி, மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த டிரினிடாட் டொபாக்கோ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற டிரினிடாட் கேப்டன் டேரன் கங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் அட்ரியன் பரத் ஆகியோர் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 21 க்கு உயர்ந்தபோது 11 ரன்கள் எடுத்திருந்த பரத், வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் பந்தில் போல்டானார். இதையடுத்து ப்ராவோ களமிறங்கினார். இவரும் அதிரடியை காட்டினார். அணியின் எண்ணிக்கை 41 க்கு உயர்ந்தநிலையில், 21 ரன்கள் எடுத்திருந்த சிம்மன்ஸ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் கங்கா 5 ரன்கள் மட்டுமே எடுத்து ப்ரான்க்ளின் பந்தில் சதீஷால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதே ஸ்கோரிலேயே விக்கெட் கீப்பர் ராம்தின் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்பஜன் பந்தில் அவராலேயே பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் 57 ரன்களை எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்தது டிரினிடாட் அணி. இதனை அடுத்து டிரினிடாட் அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஹர்பஜன் மற்றும் மலிங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசினர். இதனால் டிரினிடாட் அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது. டிரினிடாட் தரப்பில் அஹமது எடுத்த 23 ரன்களே அதிகபட்சமாகும். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும், அஹமது, பொல்லார்ட்டு, பிராங்ளின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். ஆனால் டிரினிடாட் அணியின் ராம்பாலின் அதிரடியான பந்துவீச்சில் முன்னணி பேட்ஸ்மேன்கள்   சுமன்-10, பிராங்க்ளின் -0 , சைமண்ட்ஸ் -0 என்று ஆகியோர் அவுட்டானார்கள். துவக்க வீரர் பிளிஜார்டின் விக்கெட்டை பத்ரி எடுக்க, 16 ரன்களை எடுப்பதற்குள் மும்பை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ராயுடுவுடன் ஜோடிசேர்ந்த அதிரடி வீரர் பொல்லார்டும் 9 ரன்களை மட்டும் எடுத்து நரைன் பந்தில் போல்டானார். இதனால் மும்பை அணியின் வெற்றி கேள்விக்குறியானது. மிக எளிய இலக்கை கடின இலக்காக்கி மும்பை அணி தத்தளித்தது. டிரினிடாட் டொபாக்கோ அணியின் பந்துவீச்சும் பீல்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு முறை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கைகொடுக்க மும்பை அணி வெற்றி இலக்கை மிக மெதுவாக நெருங்கியது. அணியின் எண்ணிக்கை 96 ஐ எட்டியபோது 8 வது விக்கெட்டாக மலிங்கா எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை அணிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. 47 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்த ராயுடு மும்பை அணி 97 ரன்களில் இருந்தபோது ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் களமிறங்கிய சாஹால் அந்த பந்தை தட்டிவிட்டு மிக வேகமாக ஓடி ஒரு ரன்னை எடுத்தார். அதற்குள் பந்து பீல்டரை எட்டிவிட சாஹால் மிக வேகமாக இரண்டாவது ரன்னிற்கு ஓடினார். அதற்குள் பந்து கீப்பர் ராம்தின் கைக்கு கிடைத்தது. ஆனால் கீப்பர் பந்தை ஸ்டெம்பை குறிவைத்து அடிக்காததால் சாஹால் அந்த ரன்னையும் பூர்த்தி செய்தார். இதனால் கடைசி பந்தில்  மும்பை இண்டியன் த்ரில் வெற்றியை பெற்றது. ஆட்ட நாயகனாக ரவி ராம்பால் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஹர்பஜன்சிங் இந்த போட்டியில் வெற்றிபெற அனைத்து தகுதிகளும் நிறைந்த அணி டிரினிடாட் டொபாக்கோதான் என்றார். தங்களது அணி வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடியதாக தெரிவித்த அவர், பேட்டிங் இவ்வளவு மோசமாக இருந்தால் அரையிறுதியை எட்டுவது கடினம் என்றும் தெரிவித்தர்.
போட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த டிரினிடாட் டொபாக்கோ அணி கேப்டன் டேரன் கங்கா, தங்களது அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் எதிரணிக்கு சிரமத்தை ஏற்படுத்தியது என்றும் கடைசியில் கீப்பர் ராம்தின் முடிவை மாற்றிவிட்டார் என்றும் ஆனால் ஆட்டத்தில் இதுவெல்லாம் சகஜம் என்றும் தெரிவித்தார்.
மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்