முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தையும் விட மேலானவர் அன்னா ஹசாரே-அரவிந்த் கெஜ்ரிவால்

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். - 10 - சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பாராளுமன்றத்தையும் விட மேலானவர். ஒரு பிரஜை என்ற முறையில் தட்டிக் கேட்க அவருக்கு உரிமை உள்ளது என்று அன்னா ஹசாரே குழுவினரில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  ஜனலோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கிட்டத்தட்ட 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மக்களின் ஆதரவை பெற்றவர்தான் அன்னா ஹசாரே. இவரது கோரிக்கைகளை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இருந்தாலும் கூட மத்திய அரசுக்கும், அன்னா ஹசாரேவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அன்னா ஹசாரே மிரட்டி உள்ளார்.  இந்த நிலையில் இவரது குழுவினரில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத மிரட்டல் விடுப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று கேட்கப்பட்டது. அன்னா ஹசாரே பாராளுமன்றத்தையும் விட மேலானவரோ? என்றும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால் ஆவேசத்துடன் கூறியதாவது,  பாராளுமன்றத்தையும் விட அன்னா ஹசாரே மேலானவர்தான். ஒரு பிரஜை என்ற முறையில் அவருக்கு உரிமை உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பிரஜையும் பாராளுமன்ற்தை விட மேலானவர்கள்தான். அவர்களுக்கு பாராளுமன்றம் இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை என்று சொல்ல எல்லா உரிமையும் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள் பாராளுமன்றத்தை விட மிக முக்கியமானவர்கள்தான். அப்படிப் பார்த்தால் இந்திய அரசியல் சட்டப்படி அன்னா ஹசாரேவும் ஒவ்வொரு பிரஜையும் மேலானவர்களே. அரசியல் சட்டம் அப்படித்தான் சொல்கிறது என்று ஆவேசத்துடன் கூறினார் கெஜ்ரிவால். வாக்குறுதியை நிறைவேற்ற எந்த கட்சி தவறினாலும் உத்தரபிரதேச தேர்தலில் நாங்கள் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம். அது பாரதீய ஜனதாவாக இருந்தாலும் சரி, உ.பி. சட்டமன்ற தேர்தலில் எங்கள் குழு எதிராக பிரச்சாரம் செய்யும் என்றும் அவர் கூறினார். ஹிசாரில் பிரச்சாரம் செய்த ஹசாரே, காங்கிரசுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது நினைவிருக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்