முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிங்பிஷருக்கு நிதியுதவி செய்யக்கூடாது: வ.ஊழியர் சங்கம்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

வதோதரா, நவ.17 - கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்பிஷர் நிறுவனத்துக்கு எக்காரணத்தை கொண்டும் நிதியுதவி செய்யக் கூடாது என்று அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கிங்பிஷருக்கு உதவ வங்கிகள் முயற்சி மேற்கொண்டால் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அனைத்து வங்கி பணியாளர் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், கிங்பிஷர் நிறுவனத்துக்கு எதற்காக வங்கிகள் உதவ வேண்டும். இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு விரிவாக கடிதம் அனுப்பி உள்ளோம். எந்த வங்கியும் எந்த வகையான உதவியும் இனி கிங்பிஷர் நிறுவனத்துக்கு தரக் கூடாது. மேலும் எந்த வங்கியாவது மல்லையாவின் நிறுவனத்துக்கு கடன் தர முடிவு செய்தால் அதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் என எங்கள் சங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இயக்குனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கிங்பிஷர் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலை, பங்குகள் பரிமாற்றத்தில் நடந்த தலைமறைவு வேலைகள் அனைத்தையும் பாராளுமன்ற கூட்டுக் குழு மூலம் ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார்.  
இந்த நிலையில் கிங்பிஷர் விமான நிறுவனத்தை காப்பாற்றுமாறு தாம் அரசை கோரவில்லை என்றும் குறுகிய கால கடனாக ரூ. 800 கோடி வரை வேறு யாராவது கடனாக தர முன்வந்தால் நிலைமையை சமாளிக்க வேண்டும் என்றும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். கிங்பிஷர் நிறுவனத்துக்கு நிதியுதவி அரசு துறை வங்கிகள் தரக் கூடாது என நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இவ்வாறு பல்டியடித்துள்ளார் மல்லையா.
இந்திய மது விற்பனையில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்தும் அளவு ஆதிக்கம் உள்ளனர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். அணியின் உரிமையாளராகவும் உள்ளார். ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் பெரும் அரண்மனை ஒன்றையும் கர்நாடகத்தில் இவர் கட்டி வருகிறார். அழகிகளின் அரை நிர்வாண காலண்டர் அடிப்பதற்கே பல கோடிகள் செலவிடும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் இந்திய விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாக செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணத் தொகையாக பல நூறு கோடி ரூபாய் பாக்கியாக நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு தொழிலதிபருக்கும், அவரது முறையற்ற நிறுவனத்துக்கும் எதற்காக நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கேள்வியாக உள்ளது. மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனத்தை மூட வேண்டும். அல்லது அரசுடமையாக்க வேண்டும் என்று அனைவரும் கோர துவங்கியுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார் மல்லையா.
இப்போது அரசு உதவி வேண்டாம். அன்னிய முதலீட்டை அனுமதியுங்கள் என்று கதற ஆரம்பித்துள்ளார். இருப்பினும் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அது பல மோசடியான செயல்களுக்கு அடித்தளமாகி விடும் என்பதால் அதனை அனுமதிக்க முடியாது என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்