முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது தொடக்க விழா

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 27 - கடந்த 1862-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றமாக செயல்பட தொடங்கியது. சென்னை ஐகோர்ட் 150 வது ஆண்டை கொண்டாட உள்ளது. அதன் முன்னோடியாக நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி அல்டாமஸ் கபீர் துவங்கி வைத்தார். கவி பேரரசு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதி, திரை இசை பின்னணி பாடகர்களின் சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து பாடலுடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து லஷ்மன் சுருதி இசை குழுவினர் ஒருமைப்பாட்டை வெளிபடுத்தும் வகையில் பன்மொழி திரை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்து பாடல் எழுதிய வைரமுத்து, இசையமைப்பாளர் பரத்வாஜ், லஷ்மன் ஸ்ருதி இசை குழுவினர்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கின்ற நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.கங்குலி,எச்.எஸ்.கோகுலே, எஸ்.கே.முகோபாத்தியாயா மற்றும் ஜம்மு- காஷ்மீர் தலைமை நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலியதுல்லா மற்றும் சட்ட அமைச்சர் எம்.பரஞ்ஜோதி, அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதிகள் எலிபி தர்மாராவ், டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நீதிபதிகளின் மனைவிமார்கள் அனைவரும் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து 150 வது ஆண்டு விழாவினை மங்களகரமாக துவக்கி வைத்தனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எலிபி தர்மாராவ் வரவேற்புரை ஆற்றினார். அதில் சென்னை ஐகோர்ட் நீதி துறையின் அடையாள சின்னமாக திகழ்கிறது என்று பேசினார். சட்ட நாள் (நவ.26 லா டே) உறுதி மொழியை நீதிபதி அல்டாமஸ் கபீர் வாசகத்தை வாசிக்க, அவரை தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். சென்னை ஐகோர்ட் 150 வது ஆண்டு விழாவை போற்றும் வகையில் தபால்துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தலைமை அஞ்சல் தலைவர் சாந்தி நாயர் வெளியிட்டார். அதனை சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்தாஸ் கபீர் பெற்றுக் கொண்டார்.  அதன் பிறகு அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், பாரம்பரிய ஐகோர்ட் 150 வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  பிறகு தமிழக சட்ட அமைச்சர் எம்.பரஞ்ஜோதி பேசுகையில், இந்த சென்னை 150 வது ஆண்டு விழாவானது தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெறுவது பெருமையளிக்கிறது. இந்த விழாவிற்காக முதல்வர் 40 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் நீதிமன்ற மாண்புகளை காப்பாற்ற நிலைநாட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் சென்னையில் ஒருங்கிணைத்த புதிய கோர்ட் கட்டடங்களை கட்டுவதற்கு நிலம் மற்றும் நிதியை முதல்வர்  வழங்கியுள்ளார். 2001- 2002-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்தை அமுல்படுத்த 5 கோடி ரூபாய் வழங்கி கம்ப்யூட்டர் அமைப்பதற்கு ரூ.2.18 கோடி நிதியை வழங்கியுள்ளார். பொதுமக்கள் நீதி பெற வெகுதூரம் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதால் மதுரை கிளை தொடங்க நதி அளித்தார். தமிழகத்தில் 3 வது முறை ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட கல்லூரி மற்றும் மதுரை கிளை நீதிபதிகளுக்கு சொகுசு பங்களா கட்டித் தர திட்டங்களை வகுத்துள்ளார் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்