முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீட்டை கண்டித்து இன்று கடையடைப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.1 - சென்னை, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தமிழகத்தில் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். மாவட்டங்களில் உண்ணாவிரதமும் இருக்கின்றனர். இதையொட்டி, மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை 51 சதவிகிதம் அனுமதிப்பது என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும் என்று நாடு முழுவதும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்திலும் கடந்த 2 நாட்களாக இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட சில கட்சிகளும் அரசுக்கு ஆதரவான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன. தமிழகத்தில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், பா.ஜ. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சில்லரை வர்த்தகத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  

இந்த பிரச்னை தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் கொள்கை முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இந்த விஷயத்தில் மாநில அரசுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தாது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதற்கிடையே, மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் டிசம்பர் 1 ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு நடத்துவார்கள் என்று கூறியுள்ளார். அதேபோல மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்று வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

வணிகர் சங்கங்கள் அறிவித்தபடி, இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் கடைகளை அடைக்க வேண்டும் என்று அந்தந்த சங்கங்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மளிகை, பெட்டிக்கடை உள்பட அனைத்து கடைகளும் நாளை மூடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிலும் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மட்டும், ஓட்டல்களை திறந்து வைக்க போவதாகவும், கடையடைப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவித்துள்ளது.

கடையடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடக்கும் இடங்களிலும் பாதுகாப்பு போடப்படுகிறது. முக்கிய இடங்களில் ரோந்துப் பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் திறந்திருக்கும் கடைகளை மூடச் சொல்லியோ, மூடிய கடைகளை திறக்கச் சொல்லியோ யாரும் வற்புறுத்த கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்