முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடு: பாராளுமன்றம் 9-வது நாளாக ஸ்தம்பித்தது

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.3 - சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்த பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் பாராளுமன்றத்தில் நேற்றும் முட்டுக்கட்டை ஏற்பட்டு சபை நடவடிக்கைகள் 9 வது நாளாக ஸ்தம்பித்துப் போயின. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சபையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியதால் இரு சபைகளும் ஸ்தம்பித்துப் போயின. 

பாராளுமன்ற லோக்சபையும், ராஜ்யசபையும் நேற்று கூடிய சில நிமிடத்திலேயே ஒத்தி வைக்கப்பட்டன. முன்னதாக, லோக்சபையில் சபாநாயகர் மீராகுமார் கேள்வி நேரத்தை துவக்க முற்பட்டார். அப்போது இ. கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வாசுதேவ் ஆச்சார்யா எழுந்து சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டு பிரச்சினையை அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது அவருடன் பா.ஜ.க. எம்.பி. முரளி மனோகர் ஜோஷியும் இணைந்து பிரச்சினையை எழுப்பினார். 

சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை கண்டிக்கும் வகையில் ஒரு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை ஜோஷி கொடுத்தார். இதையடுத்து பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் இணைந்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் எழுந்து சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை கண்டித்தனர். அரசு இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று திரிணாமுல் எம்.பிக்கள் கோஷங்களை எழுப்பினார்கள். 

இது போதாதென்று கேரளத்தை சேர்ந்த எம்.பிக்களும் சில அட்டைகளை தூக்கி காட்டியபடி பிரச்சினை எழுப்பினார்கள். கேரளாவை பாதுகாக்க வேண்டும் என்று அந்த அட்டைகளில் எழுதப்பட்டிருந்தது. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேரள எம்.பிக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சபையின் மையப் பகுதிக்கு விரைந்து கோஷங்களை எழுப்பவே சபாநாயகர் மீராகுமார் நண்பகல் வரை சபையை ஒத்தி வைத்தார். 

ராஜ்யசபையிலும் இதே நிலை நீடித்தது. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். சபை தலைவர் ஹமீத் அன்சாரி தனது இருக்கைக்கு வந்ததுமே அவர்கள் இவ்வாறு போர்க்கொடி உயர்த்தினர். அன்னிய முதலீட்டை வாபஸ் பெறு. கிழக்கிந்திய கம்பெனிகளை வாபஸ் பெறு என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். பாரதீய ஜனதா, அ.தி.மு.க. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி போன்ற கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். இவர்கள் சபையின் மையப் பகுதிக்கு நுழைய முற்பட்டதும் ஹமீத் அன்சாரி சபையை நண்பகல் வரை ஒத்தி வைத்தார். பாராளுமன்றம் நேற்று 9 வது நாளாக எந்த அலுவல்களும் நடக்காமல் ஸ்தம்பித்துப் போனதுதான் மிச்சம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்