வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் பங்கேற்கும் ஓபன் சர்வதேச செஸ் போட்டி

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஜன.- 3​- வெளிநாட்டு வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டி சென்னையில் இன்று துவங்குகிறது. வருகிற 12ம் தேதி வரை நடக்கும் இதில் ஏறக்குறைய 300 பேர் பங்கற்கிறார்கள்.இதுகுறித்து அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் தலைவரும், போட்டிக்குழு தலைவரும், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மாநில செஸ் சங்கமும், ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் அமைப்பும் இணைந்து அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் ஆதரவோடு சென்னை ஓபன் என்ற பெயரில் சர்வதேச செஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் 4வது போட்டி 3-​ம் தேதி (இன்று) துவங்கி வருகிற 12ம் தேதி வரை சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான போட்டிக்கு எஸ்.டி.ஏ.டி.யும் ஆர்.எம்.கே.கல்வி குழுமமும் ஸ்பான்சர் செய்கிறது. மொத்தம் 11 சுற்றுகள நடைபெறும் இந்த போட்டியில் 18 கிராண்ட் மாஸ்டர்கள், 29 சர்வதேச மாஸ்டர்கள், 2 பெண்கிராண்ட் மாஸ்டர்கள், 3 பெண் சர்வதேச மாஸ்டர்கள் என மொத்தம் 286 பேர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இது தவிர மேலும் சிலர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெலாரஸ், உக்ரைன், ஐஸ்லாந்து, பங்களாதேஷ், சீனா, உஸ்பெகிஸ்தான், ஹங்கேரி, பிரேசில், நேபாளம், போட்ஸ்வானா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய 13 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியாவிலிருந்து எஸ்.பி.சேதுராமன், தீபன் சக்கரவர்த்தி, திப்யேந்து பரூவா, ஆர்.ஆர்.லட்சுமண், ஸ்ரீராம் ஜா ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 11 சுவிஸ் சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் விளையாட்டுத்துறைக்கு பொற்காலம் ஆகும். அவரது ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக செஸ் விளையாட்டு பள்ளிகளில் கட்டாயம் ஆக்கப்படும் என சட்டசபையில் அறிவித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். ஏனெனில் செஸ் விளையாட்டு மாணவர்களின் நினைவாற்றலையும் அதிகரிக்கும். எனவே, தான் அதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். இந்த நேரத்தில் அதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூற செஸ் நிர்வாகிகள் கடமைப்பட்டுள்ளோம்.
அவரது சீரிய முயற்சியால் தான் சென்னையில் பல சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்னை ஓபன் செஸ் போட்டியும் வெற்றிகரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
பேட்டியின்போது அகில இந்திய செஸ் சம்மேளன பொதுச்செயலாளர் பரத் சிங், ஆசிய செஸ் சம்மேளன செயலாளர் டி.வி.சுந்தர், தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் முரளிமோகன், தலைமை நடுவர் ஸ்ரீவத்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: