முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் பத்திரிகை மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 -  முதல்​அமைச்சர் ஜெயலலிதா பற்றி செய்தி வெளியிட்ட நக்கீரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சென்னை  உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை  உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி வாசுகி ஆகியோர் அடங்கிய டிவிசன்பெஞ்ச் முன்பு அட்வகேட் ஜெனரல் நவதகிருஷ்ணன் நேற்று ஆஜராகி நக்கீரன் பத்திரிகை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

முதல்​அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி தவறான செய்திகளை வெளியிடுவதற்கு நக்கீரனுக்கு ஏற்கனவே சிவில் கோர்ட்டு தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அப்படியே முதல்வரை பற்றி நக்கீரன் பத்திரிகை செய்தி வெளியிடுவதாக இருந்தால் அதுபற்றி முதல்​அமைச்சரிடம்  கருத்து கேட்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை மீறும் வகையில் முதல்​அமைச்சரை பற்றி நக்கீரன் தொடர்ந்து அவதூறு  செய்திகளை வெளியிட்டு   வருகிறது. ஆகவே அந்த பத்திரிகை மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் நவதகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இதையடுத்து தலைமை நீதிபதி,  மனுவாக தாக்கல் செய்யும்படி கூறினார். அந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

மற்றொரு வழக்கு:     முதல்​அமைச்சர் ஜெயலலிதா பற்றி  தவறான செய்தி வெளியிட்ட  நக்கீரன் பத்திரிகை  ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், நிருபர் உமர்குப்தா, ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணி இணை செயலாளர் வாசுதேவன் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நக்கீரன் பத்திரிகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்​அமைச்சருமான ஜெயலலிதா அசைவ உணவு சாப்பிடக் கூடியவர் என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தெரிவித்ததாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது.   அடிப்படை ஆதாரமற்றது. உள்நோக்கம்  கொண்டது.  முதல்​ அமைச்சருக்கு பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நன்மதிப்பை  கெடுக்கும் விதமாக இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அரசியல் எதிரிகளுடன் சேர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். எனவே மனுவில் குறிப்பிட்டுள்ள 3 பேர் மீதும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கேட்டு ஜாம்பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய  கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்