முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. பேட்டிங் அபாரம்: இந்திய வீரர்கள் சொதப்பல்

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெர்த், ஜன.14 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் 161 ரன்களில் சுருண்டனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்ய மூன்றாவது டெஸ்டை வென்றே தீர வேண்டிய கட்டாய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டை வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற நிலை.

இந்நிலையில் நேற்று காலை பெர்த்தில் உள்ள டபிள்யூ. ஏ.சி.ஏ. மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த  மைதானத்தில் இந்திய அணியை பேட் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்திய துவக்க வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணிக்கு துவக்கம் மீண்டும் சரியாக மையவில்லை.  இந்திய அதிரடி வீரர் சேவாக் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஹில்பின்ஹாஸ் பந்தில் வழக்கம்போல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்திய அணி 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.  அடுத்து களமிறங்கிய ராகுல் டிராவிட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எண்ணிக்கை 32 ஆக இருந்தபோது, ஹில்பின்ஹாஸ் பந்தில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டிராவிட் போல்டானார். அடுத்து 99 வது சதத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் சச்சின் களமிறங்கினார்.  இவர் 15 ரன்களை எடுத்திருந்தபோது இந்த தொடரில் முதன்முதலாக களமிறக்கப்பட்ட ரியான் ஹாரிஸ் எல்.பி.டபிள்யூ. முறையில் சச்சினை அவுட்டாக்கி அவரது நூறாவது சத கனவை தகர்த்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து லட்சுமன் களமிறங்கினார்.  அதுவரை தாக்குப்பிடித்த காம்பீர் 31 ரன் எடுத்த நிலையில் ஹில்பின்ஹாஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.  அடுத்ததாக இளம் வீரர் விராட் ஹோக்லி லட்சுமனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இதனால் இந்திய அணி நூறு ரன்களை கடந்தது. அணியின் எண்ணிக்கை 131 க்கு உயர்ந்தபோது 44 ரன்களை எடுத்திருந்த விராட் ஹோக்ளி, சிடிலின் பந்துவீச்சில் வார்னரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்திலேயே லட்சுமன் 31 ரன்கள் எடுத்த நிலையில் சிடிலின் பந்திலேயே கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹோக்ளி, லட்சுமன் ஜோடி 5 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அதிகபட்சமாக 68 ரன்களை சேர்த்தது. அடுத்தபடியாக இந்திய கேப்டன் தோனி அடித்த 12 ரன்களே அதன்பிறகு வந்த இந்திய வீரர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்திய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் இந்திய அணி 60.2 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி தரப்பில் ஹில்பின்ஹாஸ் 4 விக்கெட்டுகளையும், சிடில் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கோவன் ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சு ஆஸி. வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் 23 ஓவர்களில் அதிரடியாக 149 ரன்களை குவித்தனர். இதில் வார்னர் 80 பந்துகளில் 104 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு துவக்க வீரர் கோவன் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் நாளிலேயே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பி உள்ளது. பெர்த் டெஸ்ட்டும் மிக மோசமான தோல்வியை கொடுப்பது உறுதி என்ற நிலையில் இந்திய அணியின் நிலை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்