முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் இருந்து 2 ஆண்டுகளில் பிரிட்டீஷ் படைகள் வெளியேறும்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

லண்டன், ஜன.- 30 - ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதாவது 2014 ம் ஆண்டு பிரிட்டீஷ் படைகள் வெளியேறும் என்று பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஆப்கானிஸ்தானை அமேரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன. இந்த நேட்டோ படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு  கடந்த ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டன. ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட சில நேட்டோ நாடுகளின் படைகள் மட்டும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இருந்து வருகின்றன.  ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று அரசு முறை பயணமாக லண்டன் சென்றிருந்தார். அங்கு பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்துப் பேசிய ஹமீது கர்சாய் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆப்கானிஸ்தான் புனரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தகளும் கையெழுத்தாயின. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டீஷ் படைகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வெளியேறும் என்றார். அதாவது வருகிற 2014- ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிரிட்டீஷ் படைகள் முழுவதுமாக வாபஸ் பெறப்படும் என்றும் அவர் கூறினார். தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் நிவாரண பணிகளுக்கு பிரிட்டீஷ் அரசு எல்லா விதமான உதவிகளையும் வழங்கும் என்றும் கேமரூன் தெரிவித்தார்.   
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்