முக்கிய செய்திகள்

கருப்பு பண விவகாரம் - அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

SC 0

 

புதுடெல்லி,மார்ச்.19  - வெளிநாடுகளில் கருப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்திய தொழிலதிபர்களும் பெரும் பணக்காரர்களும் முறைகேடாக சம்பாதித்த பணத்திற்கு முறையாக வரி கட்டாமல் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி ரூ. 80 லட்சம் கோடி வரை வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் பிரபல வழக்கிறிஞர் ராம்ஜெத்மலானி பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சுதர்ஸன் தலைமையிலான பெஞ்சில் நடைபெற்று வருகிறது. நேற்றும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் விபரம் மற்றும் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து அறிய சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்தவழக்கில் ஒரு விஷயம் மட்டும் அல்ல. பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அதனால் சட்ட அமுலாக்க இயக்குனரகம்,சி.பி.ஐ.,வருவாய்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதில் கொள்கை அளவில் மத்திய அரசுக்கு ஆட்சேபம் எதுவும் இருக்கிறதா என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வருகின்ற 28-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது குறித்த தனது பதிலை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: