திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நேற்று நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,பிப். - 3 - திருப்பரங்குன்றத்தில் நேற்று  தெப்பத்திருவிழா நடந்தது. முருகப்பெருமானின் முதற்படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இத் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு காலை, மாலையில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கின்றனர். நேற்று காலை ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தின் முன்பு சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளினர். அங்கு யாகம் வளர்க்க்பட்டு பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி மிதவை தெப்பத்தில் எழுந்தருளினார்.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பம் காலை 3 முறையும் இரவு 3 முறையும் வலம் சென்று தெப்பத்திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலித்தனர். இன்று தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: