முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிவேக ரயில்கள் விட வைர நாற்கர திட்டம்: ஜனாதிபதி

திங்கட்கிழமை, 9 ஜூன் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 10 - எல்லா மாநிலத்திலும் ஐஐடி, ஐஐஎம் துவங்கப்படும். அதிவேக ரயில்கள் விடுவதற்கு வைர நாற்கர திட்டம் செயல்படுத்தப்படும். புதிதாக 100 நகரங்கள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது உரையில் தெரிவித்தார். 

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். 16வது மக்களவைக்கு தேர்வான உறுப்பினர்கள் கடந்த 5,6ம் தேதிகளில் பதவியேற்றுக் கொண்டனர். மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில் கூறியதாவது, 

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சிக்கு பெரும்பான்மையாக இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். நிலையான அரசு மற்றும் ஒற்றுமையான இந்தியாவுக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். தற்போது அரசின் முன்பாக மிகப் பெரும் சவாலாக உணவு பொருள், பணவீக்கம் உள்ளது. 

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பாதுகாப்பு, பாசனம் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும். பொது விநியோக திட்டம் சீரமைக்கப்படும். பதுக்கல், கள்ளசந்தை முற்றிலுமாக ஒழிக்கப்படும். வறுமை குறைப்பை காட்டிலும் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முன்னுரிமை அளிக்கப்படும். 

புதிய சுகாதார கொள்கை வகுக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஐஐடி, ஐஐஎம் கள் உருவாக்கப்படும். விளையாட்டு பயிற்சிகள் பள்ளி பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். தேசிய மதரசா நவீனமயமாக்கல் திட்டம் தொடங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு ஒரு போதும் சகித்து கொள்ளாது. பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படும். பெண் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

ரயில்வே துறைக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும். நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்குவதற்காக வைர நாற்கர திட்டம் கொண்டு வரப்படும். சிறிய நகரங்களையும் இணைக்கும் வகையில் குறைந்த செலவிலான விமான நிலையங்கள் உருவாக்கப்படும். புதிதாக 100 நகரங்கள் உலகத்தரத்தில் உருவாக்கப்படும். 75வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன் எல்லா குடும்பத்திற்கும் சொந்த வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். 

கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி தேசிய கடல்சார் பாதுகாப்பு படை உருவாக்கப்படும். தொலை தொடர்பு அலைவரிசை, நிலக்கரி, தாது சுரங்கங்கள் உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்வதில் தெளிவான விதிமுறைகள் உருவாக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது உரையில் தெரிவித்தார். இதை தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை தனித்தனியாக கூடியது. இவற்றில் ஜனாதிபதி உரை தாக்கல் செய்யப்பட்டது. இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் இன்று விவாதம் நடைபெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்