முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுபவ் நிதி நிறுவன பணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 5 - அனுபவ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறாதவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ கடன் தீர்ப்பாளரை அணுகுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையின் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதன் பிறகு தங்களது பணத்தைத் திரும்பப் பெற முடியாது எனவும் மூத்த வழக்குரைஞர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

அனுபவ் நிதி நிறுவனம் பல்வேறு விளம்பரங்கள் மூலம் லட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடம் முதலீடாகப் பெற்றது.

ஆனால், அந்த முதலீட்டுத் தொகை முதிர்வு அடைந்த பிறகும் பணத்தைத் திருப்பித் தராமல் அந்த நிறுவனம் பொதுமக்களை ஏமாற்றியது.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதன் நிர்வாக இயக்குநர் அனுபவ் நடேசன் உள்பட பலரை கைது செய்தனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை விற்று, முதலீடு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு கடந்த 1999 - 2000-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக, கடன் தீர்ப்பாளராக மூத்த வழக்குரைஞர் எம்.ரவீந்திரனை உயர்நீதிமன்றம் நியமித்தது.

இந்த நிலையில், மூத்த வழக்குரைஞர் எம்.ரவீந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனுபவ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் பணத்தை திருப்பித் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிறுவனம் பல்வேறு நிதி திட்டங்கள் மூலம் 1.20 லட்சம் பேரிடம் இருந்து ரூ. 327 கோடியை பெற்றது.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அவர்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள செய்தித் தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

ஆனால்,35 ஆயிரம் பேர் மட்டுமே அவர்களது பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பணத்தை திரும்ப ஒப்படைப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட என்னுடைய பணி ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும், முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைப்பதற்கான நிறுவன நீதிமன்றம் அதன் பணிகளை விரைவில் நிறைவு செய்ய உள்ளது.

இந்த நிலையில், அனுபவ் நிறுவனத்தில் முதலீடு செய்து அதை திரும்பப் பெறாதவர்கள், உரிய ஆவணங்களுடன் வந்து தங்களது பணத்தை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கி நிறுவன நீதிமன்றத்தின் நீதிபதி ஆர்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதனால், பணத்தை திரும்பப் பெறாதவர்கள் உரிய உண்மையான ஆவணங்களுடன் கடன் தீர்ப்பாளர் அலுவலகம், உயர்நீதிமன்றம் சென்னை அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் தொடர்புக்கு 044 - 2527 1149, ஃபேக்ஸ்: 044- 2527 1152 என்ற முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

கடன் தீர்ப்பாளர் நடவடிக்கைகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதன் பிறகு பணத்தை திரும்பப் பெற முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்