முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தீ விபத்து ஏற்பட்ட வங்கி கட்டிடம் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - சென்னையில் தீ விபத்து ஏற்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கட்டிடத்தை ஆய்வு செய்ய மும்பையிலிருந்து குழுவினர் வரவிருக்கின்றனர். கட்டிடத்தை புணரமைப்பது குறித்து சி.எம்.டி.ஏ.விடமும் கருத்து கேட்கப்பட உள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டு கடன்கள் மற்றும் வங்கியின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் 2 பிரசார வாகனங்கள் தொடக்க விழா நேற்றுமுன்தினம் நடந்தது.

விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தலைமை தாங்கினார். பின்னர் 2 வாகனங்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்திகள் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் பல்வேறு முக்கிய இடங்களில் சுமார் 2 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பயிற்சி பெற்ற வங்கி ஊழியர்களைக் கொண்டு திட்டங்களை விவரித்தல் மற்றும் உடனடி தற்காலிக கடன் அனுமதி கடிதங்களும் வழங்கப்படுகிறது.

இந்த வாகனங்களை சென்னையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கவும் வங்கியின், இதர திட்டங்களை விளக்கவும் உபயோகிக்குமாறு அதிகாரிகளுக்கு அருந்ததி பட்டாச்சார்யா கூறினார். விழாவில் துணை நிர்வாக இயக்குனர் (தனி நபர் மற்றும் யுக்திகள்) டாக்டர். வி.நி.வைத்யன், சென்னை வட்டாரம், தலைமை பொது மேலாளர் பி.எஸ்.பிரகாச ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் கடந்த 12-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மரச்சாமான்களும், கம்யூட்டர், ஏ.சி, போன்ற மின்சாதனங்களும் வெடித்து தீயில் எரிந்து நாசமாயின.

இந்த விபத்தில் 2 மாடிகளும் இடிந்து விழுந்தன. இதனால் இங்கு வங்கி கிளைகள் செயல்பட முடியாது என்பதால், இங்கிருந்த கிளைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான கட்டிடம் சென்னை மாநகரின் மையப்பகுதியில் இருப்பதால் இதனை உடனடியாக புணரமைத்து மீண்டும் வங்கிப்பணிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதா? அல்லது பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் அதனை பழமையான கட்டிடங்களை சீரமைக்கும் குழுவிடம் அளித்து அதனை சீரமைப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக தற்போது மும்பையில் இருந்து அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை பார்வையிட ஓரிரு நாட்களில் வருகின்றனர்.

இவர்கள் இந்த கட்டிடத்தில் தீ எவ்வாறு பிடித்தது?, தீ விபத்தால் அடைந்த சேத மதிப்பு எவ்வளவு? உட்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்து பாரத ஸ்டேட் வங்கிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையில் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மை, பயன்பாட்டுக்கு உகந்ததா? என்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) மற்றும் பழமையான கட்டிடங்களை பாதுகாக்கும் குழு உட்பட கட்டிடக்கலை நிபுணர்களிடமும் கருத்துக்களும் கேட்கப்பட உள்ளது.

இந்த கருத்தின் அடிப்படையில் ஒரு முடிவு எடுத்து விரைவில் இந்த கட்டிடத்தை வங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony