முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனிக்கட்டி நீர் குளியல் சவால்’: பிரிட்டனில் இளைஞர் பலி

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஆக. 28 - ஏஎல்எஸ் எனப்படும் நரம்புச் சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதுதொடர்பான அறக்கட்டளைக்கு நிதி திரட்டவும் பிரபலப்படுத்தப்பட்ட பனிக்கட்டி நீர் குளியல் சவால் (ஐஸ் பக்கெட் சேலஞ்ச்) பிரிட்டனில் 18 வயது இளைஞரின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது.

பனிக்கட்டிகள் நிறைந்த மிகக் குளிர்ந்த நீரைத் தலையில் ஊற்றிக் கொள்வதுதான் இந்த சவால். ஏஎல்எஸ் எனப்படும் அறக்கட்டளைக்கு இந்த சவாலில் பங்கேற்பவர்கள் 10 அமெரிக்க டாலர்கள் நிதியளிக்க வேண்டும். சவாலை மறுப்பவர்கள் 100 டாலர்கள் நன்கொடை அளிக்க வேண்டும். இந்த சவால் மூலம் மோட்டார் நியூரான் நோய் அறக்கட்டளைக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களும் (சுமார் ரூ.15.1 கோடி), ஏஎல்எஸ் அறக்கட்டளைக்கு 6.25 கோடி அமெரிக்க டாலர்களும் (ரூ.378.4 கோடி) நன்கொடையாக திரண்டுள்ளன.

புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங் இவ்வகையிலான நோயால் பாதிக்கப்பட்டவர்

விக்டோரியா பெக்காம், பிரபல மாடல் காரா டெலிவிங்னே, வோக் பத்திரிகை ஆசிரியர் அன்னா வின்டோர், பில் கேட்ஸ், ஒபரா வின்ப்ரே, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மைக்ரோ சாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்டோரும் இந்தக் குளியலில் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த சவாலில் பங்கேற்கும் வகையில், பிரிட்டனில் உள்ள ப்ரஸ்டன்ஹில் பகுதியில், பயன்படுத்தப்படாத குவாரிக் குழியில் தேங்கியுள்ள நீரில் கேமரூன் லங்காஸ்டர் என்ற 18 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நீருக்குள் சென்ற அவர் மேலே திரும்பவில்லை. அவரின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பனிக்கட்டி நீர் குளியல் சவாலில் உயிரிழந்த முதல் பிரிட்டன் இளைஞர் கேமரூன் எனக் கருதப்படுகிறது. இந்த குளிர்ந்த நீர் குளியல் சவாலைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான, 27 வயதான கோரி கிரிபின் என்ற அமெரிக்கர் கடந்த வாரம் மாசாசுசெட்ஸ் பகுதியில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நரம்பியல் டாக்டர் கோபிநாத், மதுரை ராஜாஜி மருத்துவமனை நரம்பியல் டாக்டர் ஜெஸ்டின் ஆகியோர் கூறியதாவது:

நரம்பு சிதைவு நோய் (Amyotrophic Lateral Sclerosis -ALS) என்பது நரம்பின் உள்ளே உள்ள உயிர் செல்கள் அழிவதால், நரம்புகள் சேதமடைவதால் ஏற்படுகிறது. உடலில் உள்ள சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகள் செயலிழந்தால், மாற்று அறுவைச் சிகிச்சை மூலமாக சரிப்படுத்திவிடலாம்.

ஆனால், உயிர் செல்களை திரும்பவும் உருவாக்க முடியாது. செல்கள் அழிந்தால், அழிந்ததுதான். செல்கள் அழிந்து நரம்புகள் சேதமடையும் போது, உடலில் மேல் உள்ள சதைகள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கத் தொடங்கும். முதலில் கைகளில் உள்ள சதைகள் சுருங்கும்.

கைகளில் நடுக்கம் ஏற்படும். எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாது. எவ்விதமான வேலைகளையும் செய்ய முடியாது. அதன்பின் படிப்படியாக உடல் முழுவதும் உள்ள சதைகள் சுருங்கத் தொடங்கிவிடும். நாளடைவில் எலும்பும், தோலுமாக ஆகிவிடுவார்கள். இறுதியாக நெஞ்சுப்பகுதியில் உள்ள சதைகள் சுருங்குவதால், நுரையீரல் விரிவடைவது தடைப்படும். சரியாக சுவாசிக்க முடியாது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்த நரம்பு சிதைவு நோய் மரபு கோளாறால் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நோயை குணப்படுத்த முடியாது. நரம்பு சிதைவு நோய்க்கு ஐஸ் பக்கெட் குளியல் என்பது ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் தான்.

உடலில் திடீரென்று ஐஸ் கட்டிகள் கொண்ட தண்ணீரை கொட்டினால், உடலில் தட்பவெட்ப மாற்றம் ஏற்படும். இதயம் துடிப்பதும், செல்கள் இயங்குவதும் தடைப்படும். மேலும் உடலில் வளரும் சதைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். சில சமயங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்