முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ்: நார்வே புயல் கார்ல்சன் மீண்டும் சாம்பியன்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

கொச்சி - உலக செஸ் போட்டியின் 11-வது சுற்றில் தமிழகத்தின் ஆனந்தை தோற்கடித்து ‘நார்வே புயல்’ கார்ல்சன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சன் (நார்வே)- முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வந்தது. 12 சுற்று கொண்ட போட்டியில் முதலில் 6.5 புள்ளியை எட்டும் வீரருக்கு மகுடம் சூடப்படும் என்பது விதியாகும். முதல் 10 சுற்று நிறைவில் கார்ல்சன் 5½ புள்ளிகளும், ஆனந்த் 4½ புள்ளிகளும் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் 11-வது சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் அரங்கேறியது. கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் ஆனந்த் கருப்பு நிற காயுடன் களம் புகுந்தார். ஆட்டத்தின் முதல் நகர்த்தலாக கார்ல்சன் தனது ராஜாவின் முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் ஏற்றினார். ஆனந்த் எதிர் சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். ஆட்டம் ராய் லோப்ஸ்-பெர்லின் பாணியில் தொடர்ந்தது. 6-வது நகர்த்தலில் ஆனந்த் குதிரையை விட்டுக்கொடுத்து கார்ல்சனின் பிஷப்பை விழுங்கினார்.
அதே சமயம் கார்ல்சன் முந்தைய ஆட்டத்தை போன்று, ராணியை அடிக்கு அடி நோக்கில் 8-வது நகர்த்தலில் காவு கொடுத்தார். முதல் 10 நகர்த்தல்களுக்கு தலா 5 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்டனர். 15-வது நகர்த்தலில் ஆனந்த் கார்சனின் ராஜாவின் பக்கமுள்ள சிப்பாயை நகர்த்தி தாக்குதலை ஆரம்பித்தார். பின்னர் 18-வது நகர்த்தலில் ஆனந்த் தனது குதிரையால் கார்ல்சனின் குதிரைக்கு குறி வைத்தார். ஆனால் கார்ல்சன் குதிரையை வெட்டாமல் தனது ராஜாவின் பக்கம் இருந்த சிப்பாயினை சாதுர்யமாக நகர்த்தி தற்காப்பு ஆட்டம் ஆடினார். 20 நகர்த்தல்களில் இருவரும் தலா ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், அடுத்த 1 மணி நேரத்திலும் மேலும் 20 நகர்த்தல்களை செய்ய வேண்டி இருந்ததால் போட்டி டிரா நோக்கி நகர்வது போல் தெரிந்தது.
ஆனால் திடீரென ஆனந்த் 24-வது நகர்த்தலில் தனது யானையை கார்ல்சனின் பிஷப்புக்கு விட்டுக்கொடுத்தார். இது தான் ஆனந்துக்கு பெரும் பின்னடைவாகவும், திருப்பு முனையாகவும் அமைந்தது. இதன் பிறகு ஆட்டம் கார்ல்சன் வசமாகியது. தனது சிப்பாய்களை ராணியாக்கலாம் என்ற ஆனந்தின் கனவு கால்சனின் ராஜாவினால் கலகலத்துப் போனது.
அதே நேரத்தில் கார்ல்சனிடம் எஞ்சியிருந்தத இரண்டு சிப்பாய்களில் ஒன்று, யானையின் துணையுடன் எப்படியும் ராணியாகி விடும் என்ற நிலை காணப்பட்டது. இதையடுத்து 45-வது நகர்த்தலில் ஆனந்த் தனது தோல்வியினை ஒப்புக் கொண்டார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். இனி கடைசி சுற்று நடைபெறாது.
இந்த தொடரில் கார்ல்சன் ஏற்கனவே 2-வது மற்றும் 6-வது சுற்றிலும், ஆனந்த் 3-வது சுற்றிலும் வெற்றி பெற்றிருந்தனர். எஞ்சிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த உலக செஸ் போட்டியில் 10-வது சுற்றிலேயே கார்ல்சன் ஆனந்தின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆனால் இந்த முறை கூடுதலாக ஒரு சுற்று நீடித்து இருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த 44 வயதான ஆனந்த் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஜாம்பவான். உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் 6-வது சுற்றில் கார்ல்சன் செய்த மிகப்பெரிய தவறை சாதகமாக பயன்படுத்த தவறியதும், சில ஆட்டங்களில் யானைகளை சரியாக கையாளாததுமே ஆனந்த் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆட்டம் முடிந்த பிறகு பேட்டி அளித்த ஆனந்த், ‘யானையை, பிஷப்புக்கு விட்டுக்கொடுத்தது பெரும் பின்னடைவாக போனது. அதற்குரிய தண்டனையும்(தோல்வி) கிடைத்து விட்டது’ என்று வேதனையுடன் கூறினார்.
இனி அடுத்த ஆண்டு ‘கேன்டிடேட்’ எனப்படும் உலக செஸ் போட்டிக்கான தகுதி சுற்றில் 8 பேரில் ஒருவராக ஆனந்த் மீண்டும் விளையாடுவார். இதில் வெற்றி பெறும் வீரர், 23 வயதான கார்ல்சனுடன் 2015-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மோதுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து