முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி : சென்னை ஐ.பி.எஸ். அதிகாரிக்கும் தொற்று

புதன்கிழமை, 8 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு  கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கூடுதல் டி.ஜி.பி.க்கும் தொற்று உறுதியானதையடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30-ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.

இருப்பினும், கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்   எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களாக அமைச்சர் தங்கமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய மின்சாரத்துறை அமைச்சர்  ஆர்.கே. சிங் உடனான ஆலோசனையில் பங்கேற்க இருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். அ.தி.மு.க.வின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி, மகன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ குமரகுரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அ.தி.மு.க.வின் கலை இலக்கிய அணி  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பா.வளர்மதி சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார்.

ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு அமைச்சர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதே போன்று காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊர்க்காவல் படை கூடுதல் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராஜீவ்குமார்.

இவரது மனைவிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இவரும் பரிசோதித்துக் கொண்டார். அதில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து