மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்: கேரள சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      இந்தியா
Sailaja 2020 09 27

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிலேயே முதன் முதலாக கொரோனா தொற்று பதிவான கேரளா, துவக்கத்தில் மிகச்சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தொற்று பரவலை கணிசமாக கட்டுப்படுத்தியது. 

ஆனால், கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவுக்கு  7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரமாக உள்ளது. 

கேரளாவில்  கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சம் எட்டி வரும் நிலையில், நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறியதாவது:- 

கேரளாவில் கொரோனா 2-வது அலை தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று பரவலை துவக்கத்தில் மாநில அரசு சிறப்பாக கட்டுப்படுத்திய போதும்,  சிலர் விதிகளை காற்றில் பறக்க விட்டதால்  தொற்று  பரவல் மோசமாகியுள்ளது.   

முழு ஊரடங்கை தவிர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. ஆனால், மக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில், மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து