சென்னை கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      விளையாட்டு
Balavijay 2020-11-30

Source: provided

சென்னை : கைது செய்யப்பட்ட கார் பந்தய வீரர் பெயர் பாலவிஜய் (வயது 35). சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பாலசுப்பிரமணி சென்னை தலைமைச்செயலகத்தில் துணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோடீஸ்வரர். பெற்றோருக்கு ஒரே பிள்ளையான பாலவிஜய் பிரபலமான தேசிய கார் பந்தயவீரர். 7 முறை தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கு பெறும் தகுதியை பெற்றவர். பி.காம்.பட்டதாரி. கார் பந்தயத்தில் வெறி பிடித்து, அதில் வெற்றி பெற தனது கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தவர். கார் பந்தய வெறியில் திருமணம் கூட செய்து கொள்ளாதவர்.

தன்னைப்போல நிறைய வீரர்களை கார் பந்தயத்தில் பங்கு பெறச் செய்தவர். இப்படி கார் பந்தயத்தில் வெற்றிக்கொடிகளை நாட்டி வந்த பாலவிஜய் தற்போது ரூ.4 கோடி மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து, அதில் இருந்து மீள்வதற்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 5 வங்கிகளில் தனது நண்பர்கள் நீலாங்கரையைச் சேர்ந்த முகமது முசாமில்(34), அய்யாத்துரை(32) ஆகியோருடன் சேர்ந்து போலி வருமான வரிச் சான்றிதழ்களை மேற்படி வங்கிகளில் சமர்ப்பித்து, சுமார் ரூ.4 கோடி அளவுக்கு கடன் வாங்கி 8 சொகுசு கார்களை வாங்கியுள்ளார்.

போலியான முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை கொடுத்து வங்கி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளனர். பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களை விற்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அந்த கார்களை விற்க முடியவில்லை. வங்கி கடனை திருப்பி செலுத்தாததால், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, இந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

கார்பந்தய வீரர் பாலவிஜய் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர்கள் அய்யாத்துரை, முகமது முசாமில் ஆகியோரும் கைதானார்கள். அவர்களிடம் இருந்து 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட கார்பந்தய வீரர் பாலவிஜய் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 6 கார்களையும், குறிப்பிட்ட வங்கி நிர்வாகத்தினரிடம் போலீசார் ஒப்படைத்து விட்டனர். இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது பற்றியும் விசாரணை நடக்கிறது.

மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் தந்தை தற்கொலை

கார் பந்தய வீரர் பாலவிஜய் மோசடி வழக்கில் சிக்கியதை அறிந்த அவரது தந்தையான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாலசுப்பிரமணி தற்கொலை மூலம் உயிரை விட்டு விட்டார் என்ற பரிதாபமான தகவலை போலீசார் தெரிவித்தனர். சர்வதேச அளவில் புகழ் பெற வேண்டிய தனது மகன், மோசடி வழக்கில் சிறைக்குப்போவதை பார்க்க முடியாமல், மனம் உடைந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பே அவர் தற்கொலை செய்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டிய பாலவிஜய் தனிப்பட்ட முறையில் குடிப்பழக்கம், பெண்கள் தொடர்பு போன்ற தவறான பழக்கமும் இல்லாதவர். தனது மோசமான செயல்பாடுகளால், இன்றைக்கு பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளார். தவறான நண்பர்கள் சேர்க்கையால், பாலவிஜய் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக போலீசார் கூறினார்கள்.

புகழ் மிக்க தனது மகன் ஜெயிலுக்கு போய் விட்டான், தனது கணவரும் இறந்துபோன நிலையில், பாலவிஜயின் தாயார் தனிமையில், ஒரு வாடகை வீட்டில் சென்னையை அடுத்த கோவளத்தில் மிகுந்த சோகத்தில் வாழ்வதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து