ஓ.பி.சி. இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்: மத்திய அரசின் அரசிதழிலும் வெளியீடு

ramnath-kovind-2021-08-14

இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரிப்பதற்கு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

மகராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓ.பி.சி) பட்டியலை மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை என்று கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணையின் போது, மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்த போதிலும், மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் மகராஷ்டிரா மாநில அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

இந்நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான ஓ.பி.சி. பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தொடரில் பிற அலுவல்களை புறக்கணித்தாலும், இந்த விவகாரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து எதிர்க்கட்சிகள் ஒருமனதாக இதற்கான மசோதா நிறைவேற உதவின. தொடர்ந்து, இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த அரசியல் சாசன திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், ஓ.பி.சி. பட்டியலை நிர்ணயம் செய்யும் உரிமை மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 127-வது சட்டத்திருத்தம் ஒன்றிய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து