முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி: இந்தியாவுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு

புதன்கிழமை, 13 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா சிறப்பாக மேற்கொண்டு வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என சர்வதேச நிதியத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். 2021ல் இந்தியா 9.5% வளர்ச்சி காண வாய்ப்புள்ளது என்றும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாளரான கீதா கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது.,

கொரோனா 2-வது அலை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இந்தியா மீண்டுள்ளது. கடந்த ஜூலையில் இந்தியப் பொருளாதாரம் கொரோனா 2-வது அலையால் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன் பின்னர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியா காட்டிவரும் திறனால் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி காணும். எங்கள் கணிப்பின் படி 2020ல் 7.3% ஆகக் குறைந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2021ல் 9.5% என்றளவில் இருக்கும், 2022ல் 8.5% என்றிருக்கும் என தெரிவித்தார்.

_____________

பிரேசில் அதிபர் மைதானத்தில் நுழைய அனுமதி மறுப்பு

பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெய்ர் போல்சனாரோ பிரேசிலின் சா பாலோ நகரில் குடும்பத்தோடு விடுமுறையைக் கொண்டாடி வருகிறார். அங்கு நடந்த உள்நாட்டு அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக அங்குள்ள மைதானத்துக்குச் சென்றார். ஆனால், மைதானத்தில் இருந்த அதிகாரிகள் அவரை மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதிபர் ஜெய்ர் போல்சனரோ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. 

_____________

ரஷியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமான உள்ளது. இதனால், அந்நாட்டில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் கட்டுப்பாடுகளை விதிக்க ரஷிய அரசு தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், ரஷியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சமடைந்துள்ளது. 

அதன்படி, அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 28 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 973 பேர் உயிரிழந்துள்ளனர். 

_____________

குற்றத்தை ஒப்புக்கொண்டார் சாம்சங் தலைவர் ஜெய் ஒய்.லீ

உலகின் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தலைவர் ஜெய் ஒய்.லீ, தடை செய்யப்பட்ட மயக்க மருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். 

2015 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டு காலம் மயக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக அந்த நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள சியோல் நீதிமன்றத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தென் கொரிய நாட்டு சட்டத்தின்படி அனுமதி இல்லாத மயக்க மருந்துகளை பயன்படுத்துவது குற்றமாகும். தோல் சிகிச்சையின் காரணமாக அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்தான புரோபோபோலை (Propofol) பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். அவர் பயன்படுத்திய அதே மயக்க மருந்தை தான் பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனும் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

_____________

பிரிட்டனுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடும் எச்சரிக்கை

பிரிட்டனில் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்தனர். தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்காவிட்டால் “அது பிரிட்டனிலும் இப்போதோ பிறகோ நடக்கும்” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. “மாறு அல்லது மடி” என்று அந்த அமைப்பின் தலைவர் எம்மா ஹோவார்ட் கூறியுள்ளார்.

இப்படியான கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கும் தொனி பருவநிலை மாறுபாட்டு விளைவுகளுக்கு அரசை தயார்படுத்துவதற்காக வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள சுற்றுச்சூழல் துறை, பிரிட்டனை பருவநிலை மாறுபாட்டு விளைவுகளில் இருந்து காக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து