முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 8075 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமசந்திரன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
KKSSR 2021 11 27

தமிழகத்தில் 8075 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி  17.2 மி.மீ. ஆகும். 

வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 29.11.2021 வரை 649.4 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 356.0 மி.மீட்டரை விட 82 சதவீதம் கூடுதல் ஆகும். தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8075 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 2806 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து நீர்த்தேக்கங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர அணைகளிலிருந்து, நீர் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக அவ்வப்போது உபரி நீர் திறந்து விடப்பட்டதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து வருவாய், வேளாண், தோட்டக்கலை துறைகள் மூலம் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில்  தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் மழையினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.  கடந்த 24 மணி நேரத்தில், 522 கால்நடைகளும், 3847 கோழிகளும் இறந்துள்ளன. 2623 குடிசைகள் பகுதியாகவும், 168 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 2791 குடிசைகளும், 467 வீடுகள் பகுதியாகவும், 7 வீடுகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 474 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில், 227 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 334 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து