முக்கிய செய்திகள்

கடந்த 7 ஆண்டுகளில் ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ. 38,000 கோடியை எட்டியது : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Rajnath-Singh 2021 12 05

Source: provided

புதுடெல்லி : கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 38 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என்று மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ராணுவ தளவாட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதனால் 12 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 38 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. விரைவில் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மதிப்பை விட, ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும். சிறிய அளவில் செயல்படுவதால் நம்மால் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியாது என்று குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எண்ணக் கூடாது.

புதிய தொழில்நுட்பங்களையும், புதிய பொருட்களையும் உருவாக்க வேண்டும். வரும் 2024 - 25ம் நிதியாண்டில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியை 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 70 நாடுகளுக்கு நம் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக உலகளவில் டாப்  25 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து