முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 சதவீத எரிபொருள் விலை உயர்வால் விமானக் கட்டணங்களும் உயருகிறது ?

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      இந்தியா
Flight-2022-06-16

விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) இதுவரை இல்லாத அளவில் 16 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.  இது சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலையை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் விமான பயணத்திற்கான கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் காரணமாக தலைநகா் டெல்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.19,757.13 உயா்ந்து இனி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளானது ரூ 1,41,232.87-க்கு விற்பனையாகிறது.  இதன் காரணமாக, விமானக் கட்டணங்கள் விலை விரைவில் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், விமான எரிபொருள் விலையானது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், 16-ஆம் தேதியிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. விமான எரிபொருள் விலையானது, கடந்த மார்ச் 16-ம் தேதி அதன் விலை கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் அதாவது ரூ. 17,135.63 உயா்த்தப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி 2 சதவீத அளவுக்கும், ஏப்ரல் 16-ம் தேதி 0.2 சதவீதமும், மே 1-ம் தேதி 3.2 சதவீத அளவுக்கும் உயா்த்தப்பட்டது. மே 16-ம் தேதி 5.3 சதவீதம் உயா்த்தப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் விமான எரிபொருள் விலையானது ஒரு கிலோ லிட்டருக்கு 1.3 சதவீதம் (1,563.947 ரூபாய்) குறைக்கப்பட்ட நிலையில், ஜூன் 16-ம் தேதி மீண்டும் கடுமையான உயர்வை அதாவது 16 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரபல விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் எரிபொருள் விலையேற்றம் மற்றும் இதர இயக்கச் செலவுகளைச் சமாளிக்க பயணக் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உச்சத்திலிருக்கும் எரிபொருள்களின் விலையேற்றம் காரணமாக வருவாயில் சரிவைச் சந்தித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதன் காரணமாக, தற்போதைய கட்டணங்களிலிருந்து  10-15 சதவீதம் விலை உயர்த்தப்படும் எனவும் அந்நிறுவனத்தின் இயக்குநர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து