முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ருட்டி ராமசந்திரனை நீக்கினார் இ.பி.எஸ்.: அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்தார் ஓ.பன்னீர் செல்வம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Ops 2022-09-27

Source: provided

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில் அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த சீல் அகற்றப்பட்டு, கட்சி அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றார் எடப்பாடி பழனிசாமி. 

இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறியுள்ளார். கட்டுப்பாடுகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று(நேற்று) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து