முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிடர், பழங்குடியினர்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திட்டங்கள்: அறிக்கை வெளியிட்டது தி.மு.க.

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
DMK-Offces 2023 03 31

சென்னை, 1,000 கோடி ரூபாயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் உள்பட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திமுக அரசின் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு: ஊரில் ஒதுக்குப்புறத்தில் வாழ்பவர்களை ஊரின் நடுவே வாழச் செய்வதற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் நினைவு சமத்துவபுரக் குடியிருப்புகளை ஏற்படுத்தினார்.  100 வீடுகள் கொண்ட ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 40 வீடுகளை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்து அங்கே ஒரு ஆதிதிராவிடர் வீட்டின் இரு புறங்களிலும் பிற சாதியினர் வீடுகளை அமைத்து அவர்களிடையிலே வேறுபாடுகள் இல்லாத சமத்துவ வாழ்க்கை மலரச் செய்தார்.  அங்கே சமத்துவச் சுடுகாடு, சமத்துவ சமூக நலக் கூடம் முதலிய அனைத்தையும் சமத்துவச் சிந்தனைகளோடு ஏற்படுத்தினார்.

முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் (CM-ARISE) 225 பயனாளிகளுக்கு 16 கோடியே 76 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 10 கோடியே 65 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுடன் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஊரகப்பகுதிகள் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் வீதம் 2023-2024 முதல் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதியத்தின்கீழ் தொழில் முனைவோருக்கான சமூக நீதியை உறுதிப்படுத்திடும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் நடத்தப்பட்டுவரும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு முதலீடு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 21 புத்தொழில் நிறுவனங்கள் 28 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவுக்குப் பயன்பெற்ற நிலையில்; இத்திட்டத்தின் சிறப்பான வெற்றியைக் கருத்தில் கொண்டு 2023-24-ஆம் நிதியாண்டிற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 26 நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் பெண்களே நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.

தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் மூலம் 87 ஆயிரத்து 327 உறுப்பினர்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘மிக்‌ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மழைநீர் வெளியேற்றுதல் மற்றும் தூய்மைப்பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 4000 ரூபாய் வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளனர்.

நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாணவர் விடுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலையிலுள்ள எம்.சி.ராஜா விடுதி வளாகத்திற்குள்ளேயே 1 லட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் மாணவர் விடுதி 45 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படுகிறது.

முனைவர் பட்டப் படிப்பிற்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உதவித் தொகை 50 ஆயிரம் ரூபாய் என்பது 1 லட்சம் ரூபாய் என உயர்த்தப்பட்டு; 2,974 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு 31 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகள் மற்றும் அரசுப் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் 1,000 ரூபாய் என்பது 1,400 ரூபாய் எனவும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 1,100 ரூபாய் என்பது 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

கடந்த மூன்று ஆண்டுகளில் 166 கோடி ரூபாய்ச் செலவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் என அமைக்கப்பட்டுள்ளன.

வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் எவ்வித வேறுபாடுமின்றி, பிறர் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் 102 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தாட்கோவால் செயல்படுத்தப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரத்து 466 பயனாளிகளுக்கு 152 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) அவர்கள் மின் இணைப்புப் பெற 90 சதவீதம் மானியமாக. 46 கோடியே 65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து