முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Kumai 2024-05-06

Source: provided

குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தென்னிந்திய பெருங்கடலில் கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் அதிக தாக்கத்துடன் கூடிய கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

இதன் பாதிப்பு குமரி மாவட்ட கடற்பகுதியிலும் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் 1.5 மீட்டர் உயரத்திற்கு அலைகளின் உயரம் இருக்கும் எனவும்,45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வேகமாக வீசும் எனவும், எனவே மீனவர்கள்,பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தது. 

இந்நிலையில்,சென்னை சூளைமேடு மற்றும் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 20 பேர் ஒரு வேனில் ஆன்மீக சுற்றுலாவாக புறப்பட்டு திருச்சி, மதுரை, வாடிப்பட்டி வழியாக நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி வந்தனர்.

அவர்கள் இரவு கன்னியாகுமரியில் தங்கி விட்டு நேற்று காலை குளச்சல் அருகே கோடிமுனை ஊருக்கு சென்றனர். கோடிமுனையிலிருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.  

மதியம் சாப்பாட்டிற்காக பெண்கள் கோடிமுனையில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்திருந்த சூளைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை தமிழ் சோனியாவின் கணவர் வெசீஸ்(54),பள்ளி தேர்வு வெளியீடு பிரிவில்(டி.பி.ஐ)வேலை பார்க்கும் வாலிபர் மனோஜ்குமார் (25)உள்பட 6 பேர் அங்குள்ள தூண்டில் வளைவு கற்களில் ஏறி கடல் அழகை ரசித்தனர். 

பின்னர் ஆர்வ மிகுதியில் தூண்டில் வளைவு அருகில் உள்ள பாறை மீது ஏறி நின்றனர். அப்போது அங்கு திடீரென எழுந்த அலை பாறை மீது விழுந்ததில் நிலைதடுமாறி 6 பேரும் கடலில் விழுந்தனர். இதனை அறிந்த கோடிமுனை மீனவர்கள் 3 பைபர் படகுகளில் சென்று அவர்களை மீட்டனர்.

இதில் வெசீஸ் மற்றும் மனோஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்த குளச்சல் மரைன் போலீசார் விரைந்து சென்று 2 உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து