முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு: திருப்பூர் விவசாயிகள் நாளை முற்றுகை போராட்ட அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Farmers 2023 06 20

திருப்பூர், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 26-ம் தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது.  1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடைகிறது. . 

இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. 

இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

ஆகவே கேரள அரசை கண்டித்து நாளை 26-ம் தேதி உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. 

இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து