முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறில் புதிய அணை: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக இடிக்க, மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும், முல்லைப் பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது,  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை   142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது. மேலும், அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பிலே குறிப்பிட்டிருந்தது. 

ஆனால், 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த  தி.மு.க. அரசு முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தி, தண்ணீர் தேக்கி வைக்கும் அளவை 152 அடியாக உயர்த்த எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. 

அதை தொடர்ந்து  2011-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு மீண்டும் சட்டப் போராட்டம் நடத்தி  7.5.2014 அன்று அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதற்கும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், கேரள அரசு எவ்வித குறுக்கீடும் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்ற தீர்ப்பைப் பெற்று தந்தார்.  

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், அ.தி.மு.க. அரசில் பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளை பலப்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. 

மேலும், பேபி அணையை பலப்படுத்தும் கருவிகளைப் பொருத்துவதற்கு 23 மரங்களை வெட்ட மத்திய மற்றும் கேரள வனத் துறைகளிடமிருந்து அனுமதி கோரப்பட்டது. வனத் துறையின் அனுமதியைப் பெற கேரள அரசு தடையாக இருந்தது. இதனால் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. 

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தற்போது வரை நிலுவையில் உள்ளது. தொடர்ந்து நான் முதல்வராக பதவியேற்ற பிறகு பிரதமரிடம் நேரடியாகவும், மத்திய நீர்வளக் குழுமம், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, கேரள அரசு, கேரள வனத்துறை என்று அனைவருக்கும் பேபி அணையை பலப்படுத்த, தமிழக பொதுப்பணித் துறைக்கு அனுமதி வழங்குமாறு கடிதங்கள் மூலம் வலியுறுத்தினேன். ஆனால், கேரள வனத் துறையின் அனுமதி வழங்கப்படாததால், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் தொடர முடியவில்லை. 

மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021-ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நிலையில், முல்லைப் பெரியாறு பிரச்சினையில்  மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், குடிநீருக்காக நம்பி உள்ள பல மாவட்ட மக்களும் இன்றைக்கு வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். இனியாவது இந்த தி.மு.க. அரசு, கூட்டணிக் கட்சி என்று பாராமல்,  சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுத்து கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட   நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு  அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து