முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு:மகனிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
CBCID

Source: provided

நெல்லை:நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது மகனிடமிருந்து விசாரணை தொடங்கியிருக்கிறது.

ஜெயக்குமார் மர்ம மரண விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் துலங்காத நிலையில், ஆரம்பக்கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களிடம்தான் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திலும் எந்த தடயமும் காவல்துறைக்குக் கிடைக்காதது விசாரணையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று ஜெயக்குமார் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மகனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும்,தோட்ட ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மமாக உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தில் அப்பிரிவு போலீசார் ஆய்வு நடத்தினர்.உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி எரிந்த நிலையில் கே.பி.கே. ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதை, சந்தேக மரண பிரிவின் கீழ் உவரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.

அப்போது, ஜெயக்குமார் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் போலீஸாருக்கு கிடைத்தன. ‘மரண வாக்குமூலம்’ என்ற பெயரில் அவர் எழுதியிருந்த ஒரு கடிதத்தில், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் இவர்கள்தான் காரணம் என்று 32 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

தனிப்படை போலீசார் ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் உள்பட 32 பேரிடமும் விசாரணை நடத்தினர். எனினும், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், கரைசுத்துபுதூரில் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை தோண்டிப் பார்த்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்திய குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து