முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி காவலர்களுக்கு மேலும் ஒரு வார போலீஸ் காவல்

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்லம், பிப். 25  - கேரளத்தையொட்டிய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றதாக கருதப்படும் இரு இத்தாலி காவலர்களை மேலும் ஒரு வாரம் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. முன்னதாக இத்தாலி காவலர்கள் மாஸிமியனோ, சல்வதோர் ஜிரோன் ஆகிய இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் 3 நாட்கள் போலீஸ் விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததையடுத்து காவலர்கள் இருவரும் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீசார் கேட்டுக் கொண்டபடி அவர்களை மேலும் ஒரு வாரம் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. சம்பவத்தில் தொடர்புடைய என்ரிகோ கப்பலில் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் கடந்த 21 ம் தேதி அனுமதியளித்திருந்தது. இந்த சோதனையின் போது தங்கள் நாட்டு அதிகாரிகள் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் இத்தாலி வழக்கறிஞர் கோரினார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. 

இதனிடையே இந்த வழக்கை எப்படி நடத்துவது என்பதை மத்திய கேரள அரசின் முடிவுக்கு விட்டு விட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையே அரசு அளவிலான சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் இந்த சம்பவம் சர்வதேச கடல் பகுதியில் நடந்ததால் கேரள நீதிமன்றங்களோ, போலீசாரோ இதை விசாரிக்க முடியாது என்று இத்தாலி தொடர்ந்து கூறி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony