முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`தாலிக்கு' தங்கம் கொடுத்த அரசு அ.தி.மு.க. அரசு: அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

ஊட்டி, ஏப்.15 - `தாளிக்க' வெங்காயம் கொடுக்காத அரசு முந்தைய தி.மு.க.,அரசு, ஆனால் `தாலிக்கு' இலவசமாக தங்கம் வழங்குவது அ.தி.மு.க.,அரசு என செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா ஊட்டியில் நேற்று நடைபெற்றது. அண்ணா கலைஅரங்கில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் புத்தி சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு மற்றும் மடிக்கணினி வழங்கி பேசியதாவது:​

தமிழகத்தின் 3-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா ஏழை, எளிய பட்டாளி மக்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

கடந்த தி.மு.க.,ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டை சரிசெய்து, ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக 7 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தில் வெயில் அடிக்கும் சமவெளிப்பகுதி மக்களுக்கு மின் விசிறியும், குளிர் பிரதேச மக்களுக்கு மின்காந்த அடுப்பும் வழங்கியுள்ளார். 

மின்விசிறியை விட மின்காந்த அடுப்பின் விலை அதிகம்தான். இருந்தாலும் நீலகிரி மக்கள் கோரிக்கை வைத்ததற்கிணங்க இல்லை என்று கூறாமல் மின்காந்த அடுப்பு வழங்க உத்தரவிட்டார்.

நீலகிரி மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு பெறவந்துள்ள தூனேரி கிராம மக்களின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. ஏனெனில் முந்தைய காலத்தில் இட்லிக்கு மாவு அரைக்க வேண்டுமானால் பக்கத்து வீட்டிற்குச் சென்று தான் அரைக்க வேண்டும். அந்த நிலையை மாற்றி இல்லத்தரசிகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிறப்பு திட்டங்களை தீட்டி அதன் மூலம் அவரவர் வீட்டிலேயே இட்லிக்கு மாவு அரைக்க கிரைண்டர், சட்னி அரைக்க மிக்ஸி, அதனை சுட்டெடுக்க மின்காந்த அடுப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளார். 

கருணாநிதி ஆட்சியில் மாணவர்களுக்கு ஒரு பென்சில் கூட வாங்கித்தரவில்லை. அவரது மகன் அழகிரிக்கும், ஸ்டாலினிக்கு மட்டுமே கருணாநிதி வாங்கித்தந்துள்ளார். ஆனால் தாயுள்ளம் கொண்ட முதல்வர் ஜெயலலிதா பணக்காரன் வீட்டு பிள்ளைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிக்கணினியை ஏழை மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் விலையில்லா மடிக்கணினியை வழங்கியுள்ளார். மாடிவீட்டு மாணவர்கள் மட்டுமே பயன்படுத்திய மடிக்கணினி, இன்று ஓட்டு வீட்டு மாணவர்களும் பயன்படுத்தி உலகத்தையை வேப்பமரத்திடியில் நின்று காணுகின்றனர். இத்திட்டமானது ஏழை மாணவர்களும் உயர்ந்த கல்வி பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். 

காசு கொடுத்தாலும் `தாளிக்க' வெங்காயம் கொடுக்காத அரசு முந்தைய தி.மு.க.,அரசு. ஆனால் இன்று தாய்மார்களின் குழந்தைகளுக்கு திருமணத்திற்கு `தாலிக்கு' தங்கத்துடன் ரூ.25 ஆயிரம், படித்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவது அ.தி.மு.க.,அரசு.

தமிழக முதல்வர் திறம்பட செயல்படுவதை பார்த்து டெல்லி தலைவர்கள் எல்லாம் இந்திய திருநாட்டை ஆட்சி செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.  ஜெயலலிதா பிரதமரானால் தான் நாட்டில் முல்லைப்பெரியாறு, காவேரி, கார்கில் போன்ற பிரச்சனைகள் தீரும். நமது தமிழகத்தில் நேர்மையான, தைரியமான முதல்வரை பெற்றுள்ளோம். தமிழக முதல்வர் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் பெற்று பயனடைய வேண்டும். மாணவர்கள் தங்களது கல்வித்தரத்தை உயர்த்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தூனேரி கிராமத்தைச் சேர்ந்த 329 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு மற்றும் 240 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில் வேளாண்பல்கலைக்கழக நிர்வாக்குழு உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், மாவட்ட ஊராட்சி தலைவர் மேனகா, ஊட்டி நகர்மன்ற தலைவர் சத்தியபாமா ஆகியோர் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினர். 

விழாவிற்கு சிறப்பு செயலாக்கத்திட்ட துணை கலெக்டர் மனோகரன் வரவேற்று பேசினார். முடிவில் குன்னூர் கோட்டாட்சியர் காந்திமதி நன்றி கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பலராமன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மோகன், தூனேரி ஊராட்சி தலைவர் மகேஷ் மற்றும் அ.தி.மு.க.,நிர்வாகிகள், பயனாளிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்