முக்கிய செய்திகள்

அழகிரியே ஒரு தாதா அவருக்கு எதற்கு பாதுகாப்பு மதுரை பிரசாரத்தில் ஜெயலலிதா

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
3car

 

மதுரை,ஏப்.- 4 - மு.க.அழகிரியே ஒரு தாதா. அவருக்கு எதற்கு பாதுகாப்பு. மு.க. அழகிரிக்கு அச்சுறுத்தலே இல்லை. மு.க. அழகிரியால்தான் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று மதுரை பிரசாரத்தில் ஜெயலலிதா கேள்வி விடுத்தார். தமிழகத்தில் வரும் 13-ம் தேதி நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்றுக்காலை விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அம்பாசமுத்திரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நேற்றுமாலை 4.10 மணி அளவில் மதுரை வந்தார். மதுரை நத்தம் ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜெயலலிதா வந்திருங்கினார். பின்னர் அங்கிருந்து பிரசார வேனில் புறப்பட்டு நத்தம் ரோடு, அவுட்போஸ்ட், தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு, அருள்தாஸ்புரம், பாத்திமா கல்லூரி சந்திப்பு, தீக்கதிர் அலுவலகம்,குரு தியேட்டர் வழியாக காளவாசல் சந்திப்பை சரியாக 4.40 மணி அளவில் வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது:-

சாதாரண மனிதர்கள் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தால் அரசும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம். 

தனது மகன் மு.க. அழகிரிக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அறவே விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு கருணாநிதி அங்கலாய்த்துக்கொள்கிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறும்  மு.க. அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. அழகிரிக்கு யாராலும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. அழகிரியால்தான் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. அழகிரியே ஒரு தாதா. அவருக்கு எதற்கு பாதுகாப்பு. தா.கியை  கொலை செய்தது யார்.  பத்திரிகை அலுவலகத்தை எரித்து  3 பேர் எரித்து  கொல்லப்பட்டதற்கு யார் காரணம். அப்படிப்பட்ட அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. தந்தையின் பிறந்த நாளை சொந்த பணத்தை செலவு செய்து கொண்டாடாமல் தனியார் கம்பெனிக்கு சொந்தமான ஹார்லிக்ஸ் பாட்டீல்களை திருடி கொண்டாடிய அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அலுவலர்களை மிரட்டி வரும் தாதாவிற்கு எதற்கு பாதுகாப்பு. இட்லி கடை முதல் , நகைக்கடை உரிமையாளர்கள் வரை கப்பம் கட்ட வைத்துக்கொண்டியிருக்கும் அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. 

தன் பயணம் ஒரு கொள்கை அடிப்படையிலான பயணம் என்று கூறிக்கொள்ளும்  கருணாநிதிக்கு என்ன கொள்கை இருக்கிறது. அவர் எந்த கொள்கையைப் பற்றி பேசுகிறார். தி.மு.க.வின் கொள்கைகளை பரப்பி வந்த தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ராசா, தற்போது டெல்லி திஹார் சிறையில் தி.மு.க. கொள்கைகளை பரப்பிக் கொண்டியிருக்கிறார். இதுவே அவர்களின் கொள்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும். காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். மதுரை மாநகரில் வலம் வரும் ரவுடிகள் ஒழிக்கப்பட்டு மதுரை ஒரு ஆன்மீக நகரமாக,சுதந்திரமான நகரமாக மாற்றப்படும். தா.கி. கொலை வழக்கு,பத்திரிகை அலுவலகம் எரிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியான வழக்கில்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள். 

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மதுரை நகரத்தில் சாலைகள், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். மதுரை நகரத்தைச் சுற்றி தொழிற்சாலைகள் அமைக்கப்படும். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு செய்து தரப்படும். 

ஒரு ரவுடிக்கும்பல் தமிழ்நாட்டு மக்களை ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எ.கே.போஸ் ஆகியோர்களுக்கு எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றபெறச் செய்ய வேண்டுகிறேன். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அண்ணாதுரைக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்திலும் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.சுந்தரராசனுக்கு முரசு சின்னத்திலும் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அ.இ.பார்வர்டு பிளாக் வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு சிங்கம் சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.              

இதை ஷேர் செய்திடுங்கள்: