5 பதக்கங்களுடன் தாயகம் திரும்பும் இந்திய வீரர்கள்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. - 13 - இதுவரை இல்லாத அளவுக்கு 5 பதக்கங்களைப் பெற்ற மகிழ்ச்சியுடன்  இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்புகின்றனர்.  லண்டனில் நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வருவதையொட்டி கண்கவர் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவைப் போலவே ஆடல், பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் காத்துள்ளன. தி ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவினரின் நிகழ்ச்சிதான் அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. நீண்டஇடைவெளிக்குப் பிறகு இவர்கள் இணைந்து நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இந்தக் குழுவில் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் மனைவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க விழா கல்யாணம் என்றால், நிறைவு விழா வரவேற்பு போல பிரமாண்டமாக இருக்கும் என்று நிறைவு விழா இயக்குநர் டேவிட் அர்னால்ட் கூறியுள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இங்கிலாந்தைக் கலக்கிய 30 இங்கிலாந்து பாடகர்களின் சூப்பர் ஹிட் பாடல்களை தி ஹூ என்று பெயரிடப்பட்ட ஜார்ஜ் மைக்கேல், மியூஸ் மற்றும் எட் ஷீரன் ஆகியோர் பாடவுள்ளனர். அதேபோல தி பெட் ஷாப் பாய்ஸ், ஆன்னி லெனாக்ஸ், பேட்பாய் ஸ்லிம் ஆகியோரும் தங்களது நடனத்தால் விளையாட்டுப் பிரியர்களைக் கவரவுள்ளனர். எமலி சண்டே, கெய்சர் சீப்ஸ், டினி டெம்பா, ஜெஸ்ஸி ஜே ஆகியோரது நிகழ்ச்சிகளும் ஒலிம்பிக் நிறைவு விழாவை கலக்கப் போகும் முக்கிய நபர்கள் ஆவர். பெய்ஜிங்கில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது, பிரமாண்டமாக நடந்த நிறைவு விழாவைப் போல லண்டன் நிறைவு விழாவையும் பிரமாண்டமானதாக, மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  அடுத்த ஒலிம்பிக் போட்டியை பிரேசில் 2016ம் ஆண்டு நடத்தப் போகிறது. இதையொட்டி 8 நிமிட நேரத்திற்கு பிரேசில் குறித்த ஆடல், பாடல் நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெறவுள்ளன. இதில் சம்பா நடனமும் இடம் பெறுகிறது. 300 பேர் இந்த எட்டு நிமிட நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மற்றபடி வழக்கம் போல வீரர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் பிறந்த கிரீஸின் கொடி அணிவகுப்பு, இங்கிலாந்து, பிரேசில் நாடுகளின் தேசியக் கொடிகளின் உலா உள்ளிட்டவையும் இடம் பெறும். மொத்தத்தில் 204 நாடுகள் கலந்து கொண்ட 30வது ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் கோலாகலமாக முடிவுக்கு வந்தது.  இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை அதாவது 5 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. இதுவே ஒரு பெரிய பெருமைதான். அடுத்த முறை பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கையுடன் தாயகம் திரும்பவுள்ளனர் இந்திய வீரர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: