முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடையின் கொடுமை ஒருபுறம் மின்வெட்டின் கொடுமை மறுபுறம் இடையில் சிக்கித்தவிக்கும் தமிழக மக்கள்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். - 23 - கோடையின் வெப்ப தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தமிழகம் முழவதும்  மின்வெட்டும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தினமும் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் தினமும் 7300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது. மின் உற்பத்தி குறைவு காரணமாக தமிழ்நாட்டில் தினமும் 4700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க குஜராத், அரியானா உள்பட வடமாநிலங்களில் இருந்து அதிகவிலை கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்குகிறது. அந்த வகையில் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இதன் காரணமாக தினமும் 2700 மெகாவாட் மின் பற்றாக்குறை தமிழகத்தில் நிலவுகிறது. 

இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வழி இல்லாததால் சென்னை தவிர தமிழகம் முழுவதும் மின்வெட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி எல்லா ஊர்களிலும் சுழற்சி முறையில் 2 மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது கோடைகாலம் காரணமாக மக்களிடையே மின்தேவை அதிகரித்து விட்டது. ஆனால் அந்த தேவையை மின் வாரியத்தினால் நிவர்த்தி செய்ய இயலவில்லை.

தமிழ்நாட்டில் மின்உற்பத்தி குறைந்துள்ள நிலையில் வடமாநிலங்களில் இருந்து தொடர்ந்து அதிக பணம் கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசால் வாங்க முடிய வில்லை. ஏற்கனவே ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.14 முதல் ரூ.16 வரை கொடுத்து தமிழக அரசு வாங்குகிறது. அந்த வகையில் தினமும் ரூ.50 கோடி செலவிடப்படுகிறது. இப்படி தினமும் 50 கோடி ரூபாய் கொடுத்து மின்சாரத்தை வாங்கினால் தமிழக மின்வாரியமே முடங்கிப் போகும். 

இதற்கிடையே வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் போது ஆந்திர மாநில அரசு போட்டிக்கு வந்து விடுகிறது. தமிழக அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ.14 கொடுக்க முன்வந்தால், உடனே ஆந்திராயூனிட்டுக்கு ரூ.16 தருவதாக கூறி மின்சாரத்தை வாங்கிச் சென்று விடுகிறது. இந்த போட்டியால் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த சிக்கலுக்கு இடையே தமிழகத்தில் மின் உற்பத்தியை உயர்த்த வழியே இல்லாமல் உள்ளது. அதே நேரத்தில் வடமாநிலங்களிலும் மின்தட்டுப்பாடு உருவாக தொடங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. 

மின்சாரம் பெறுவதில் இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் சிக்கலாகவும், பிரச்சினையாகவும் இருப்பதால் மின்வெட்டை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தற்போது இருக்கும் 2 மணி நேர மின்வெட்டு, 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் இந்த மின்வெட்டு அமல்படுத்தப்படும். ஏற்கனவே பல ஊர்களில் 2 மணி நேரம் என்பதற்கு பதில் 3 அல்லது 4 மணி நேரத்துக்கு மின்சாரத்தை துண்டித்து விடுவதாக பொதுமக்கள் குமுறியபடி உள்ளனர். தற்போது 3 மணி நேரமாக மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இனி தினமும் 4 அல்லது 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருக்கும் அவஸ்தை நிலை ஏற்படலாம் என்று மக்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.

சென்னை மாநகரில் இது வரை எந்தவிதமான மின் வெட்டும் செய்யப்படாமல் இருந்தது. தற்போது வேறு வழியின்றி தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்துக்கு மின்வெட்டு செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்தது. அதன்படி சென்னையில் நேற்று காலை முதல் மின்வெட்டு தொடங்கியது. மின்வெட்டு அவஸ்தையை இதுவரை சென்னை மக்கள் அனுபவிக்காமல் இருந்தனர். இனி தினமும் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

மின் வெட்டின் முதல் நாளான நேற்றே சென்னை நகர மக்களில் பெரும்பாலானவர்கள் முணு முணுக்கத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  அதோடு கோடை வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்