ராஜபக்ஷேவை நிறுத்தி விசாரிக்க வலியுறுத்தி சென்னையில் விடுதலைசிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Thirumavalavan

சென்னை, மே.- 2 - இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும் சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை விசாரிக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மெமோரியல் ஹால் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், அதன் அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:
அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அவருக்கு தண்டனை கிடைக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசும் மக்களவை, மாநிலங்களவைகளை கூட்டி ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வலியுறுத்த வேண்டும்.
கியூபா, ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிஸ்டு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த சிவகாசியை சேர்ந்த வாலிபரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கும் வகையில், அங்கு வருகிற 8ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சிலர் ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ