முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீருடைப் பணியாளர்: 4 வாரத்துக்குள் நியமனம் செய்ய உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.11 - சீருடைப் பணியாளர் தேர்வில் என்.எஸ்.எஸ், என்.சி.சி. சான்றிதழ்கள் பெற்றவருக்கு கூடுதல் மதிப்பெண் அளித்து பணி நியமனம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சிறைத்துறை, தீயணைப்புத் துறை, ஆயுதப்படை, சிறப்புப் படை ஆகிய கிரேடு - 2 பணிகளுக்கு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஆயுதப்படை - 73, சிறப்புப் படை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றுக்கு தலா 67 மதிப்பெண் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே கட்-ஆடிப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

நான் எம்.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவன். இந்தத் தேர்வில் நான் 66 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். மேலும், எனது தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) மற்றும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) சான்றிதழ்கள் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்திருந்தேன். இவை அனைத்துக்கும் கூடுதலாக ஐந்து மதிப்பெண் உண்டு. அவ்வாறு இருந்தும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் என்னை பணிக்கு தேர்ந்தெடுக்கவில்லை.

அதனால், கூடுதல் மதிப்பெண் அளித்து எனக்கு பணி நியமன ஆணை வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தன்னுடைய அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி உள்ளார். ஆனால், தேர்வாணையம் அதற்கு உரிய மதிப்பெண் அளிக்காமல் தவறு செய்துவிட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி, மனுதாரர் 66 மதிப்பெண் பெற்றுள்ளார். அவருக்கு கூடுதல் மதிப்பெண் அளித்து நான்கு வாரத்துக்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்