முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே கைது: மத்திய அமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 17 - தடையை மீறி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மத்திய அமைச்சர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். மத்திய அரசும் இது குறித்து ஆலோசனை நடத்தியது. வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பட வேண்டும். அந்த மசோதாவில் பிரதமரையும் உட்படுத்த வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கோரிக்கை. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக கொண்டு வந்த வரைவு மசோதாவை அன்னா ஹசாரே குழு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதா ஒரு பலவீனமான மசோதா என்று அன்னா ஹசாரே கூறி வருகிறார். ஊழலை ஒழிக்கும் வகையில் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அவர் அறிவித்தார். ஆனால் அவரது உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீஸ் 22 நிபந்தனைகளை விதித்தது.
ஆனால் இவற்றில் ஒரு சில நிபந்தனைகளை மட்டும் அன்னா ஹசாரே ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அவரது உண்ணாவிரதத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர்.ஆனாலும் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார். நேற்று தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அவர், உண்ணாவிரதத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பே டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கமான வெள்ளை சட்டை, வெள்ளை தொப்பி, மற்றும் கண்ணாடியுடன் காட்சியளித்த அவரை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இருப்பினும் போலீஸ் காவலிலேயே அவர் உண்ணாவிரதத்தை தொடங்கி விட்டார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசும், காங்கிரசும் நேற்று அவசர ஆலோசனை நடத்தின.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. அதன் பிறகு காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்து இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அதற்கு பிறகே இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.
ராகுலுடன் ஆலோசனை நடத்தி விட்டு பிரணாப் முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், எங்கள் நிலையை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த நாங்கள் விரும்பினோம். உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க விரும்பினார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை அனுமதிக்கவில்லை. கூச்சல் குழப்பத்தை எழுப்பி சபையை ஒத்தி வைக்கும்படி செய்து விட்டார்கள் என்று வருத்தத்தோடு கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி, காங்கிரசின் மீடியா பொறுப்பாளர் ஜனார்த்தன் துவிவேதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஹசாரே கைது செய்யப்பட்டுள்ளார். நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம் என்று ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஒரு மூத்த அமைச்சர் தெரிவித்தார். போலீசின் நடவடிக்கையையும் அவர் ஆதரித்து பேசினார். ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் நாங்கள் அல்லவா பொறுப்பு என்று கூறி போலீசின் நடவடிக்கையை அந்த அமைச்சர் ஆதரித்து பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்