முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.18 - சட்டமன்றத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் நேற்று முதற்கட்டமாக சென்னை உள்பட 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும் நடைபெற்றது.

ஆரம்பத்தில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு போகப்போக சூடுபிடித்து விறுவிறுப்பாக நடந்தது. கடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது வன்முறை தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆடியது. கள்ள ஓட்டுக்கள் ஏராளமான அளவில் போடப்பட்டன. எதிர்க்கட்சிகளை வாக்களிக்கவே தி.மு.க.வினர் விடவில்லை. இதை தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ம.க. தலைவரான ராமதாசே அப்போது புட்டுப்புட்டு வைத்தார். தி.மு.க. செய்தது பச்சைத் துரோகம் என்று அவர் பேட்டியளித்தார். ஆனால் இந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் மிக அமைதியாக நடைபெற்றது. வன்முறைச் சம்பவங்களும் நடக்கவில்லை. மக்கள் பயமின்றி வாக்களித்தனர். 

ஜெயலலிதா ஓட்டுப் போட்டார் 

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று காலை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஓட்டுப்போட்டார். அப்போது சசிகலா, இளவரசியும் உடன் வந்து ஓட்டுப்போட்டனர். சபாநாயகர் ஜெயக்குமார் ராயபுரத்திலும், சைதையில் அமைச்சர் செந்தமிழன் மற்றும் மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி, வி.பி.கலைராஜன், வளர்மதி ஆகியோரும் ஓட்டுப்போட்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோபாலபுரத்திலும், காங்கிரஸ் கட்சித்தலைவர் தங்கபாலு அடையாறிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்திலும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்,  ராதிகா, கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லை நாடார் பள்ளியிலும், நடிகர் சிவக்குமார், டி.ராஜேந்தர் இந்தி பிரச்சார சபாவிலும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சாலிக்கிராமத்திலும் ஓட்டுப்போட்டனர். மாலை 3.00மணிக்கு நடிகர் விஜய், நடிகை சினேகா ஆகியோர் வந்து ஓட்டு போட்டனர். கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் செ.ம.வேலுசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். 

 

அ.தி.மு.க. அமோகவெற்றி பெறும் முதல்வர் ஜெயலலிதா பேட்டி 

 

சட்டமன்ற தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா ஓட்டுப்போட்ட பிறகு தெரிவித்தார்.

அ.தி.மு.க.பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று காலை சென்னையில் உள்ள ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் ஓட்டு போட்டார்.

அதன் பின்னர் நிருபர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய வெற்றி தந்தனர் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபின்னர் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி உள்ளோம் மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி உள்ளோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம்.

எனவே இந்த உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலைப்போலவே தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு முதல்வர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நேற்று சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் அமைதியாக நடந்தது. தேனியில் அதிக அளவில் வாக்குப்பதிவானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையிலும் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. அமைச்சர்களும், மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பாவும் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்