முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமாவை ஒருசிலரின் ஆதிக்கத்திலிருந்து மீட்டவர் முதல்வர்

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.16 - கடந்த சில ஆண்டுகளாக ஒரு சிலரின் ஆதிக்கத்திலிருந்த சினிமாவை மீட்டவர் முதல்வர் ஜெயலலிதா என்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். சென்னையில் 9-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழா டிசம்பர் 14-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் சர்வதேச ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் திரையிடப்படவுள்ளது. இதன் துவக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் , டி.சிட்டிபாபு, இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், செய்தித்துறையின் செயலாளர் டாக்டர் எம்.இராஜாராம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்காரா, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர் டி.டி.ஜி.தியான், செய்தித்துறையின் இயக்குனர் டாக்டர் பொ.சங்கர் மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள், திரைப்படக் கலையை பயிலும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகைகள் கார்த்திகா, தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர்.

விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

திரையுலக வரலாற்றில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னராக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரை நினைவுகூராமல் திரைப்பட விழாவை தொடங்க முடியாது. தமிழ் துரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், மிகச் சிறந்த கலைநுட்பம் வாய்ந்த திரைப்படங்களை வழங்கி இந்திய திரை உலகத்திற்கு தமது அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளார்கள்.

தமிழ் திரையுலகம் புதுமையைப் படைப்பதிலும், மக்களுக்கு தேவையான உயர்ந்த கருத்துகளை  கலை வடிவத்தில் கொண்டு சேர்ப்பதிலும், திறமையாக பணியாற்றி வருகிறது.

உலக திரைப்படங்களில் தமிழ் திரைப்படங்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. நவீன தொழில்நுட்பங்களை எடுத்துக் கொண்டு அயல்நாட்டு படங்களுக்கு இணையாக தமிழ் திரைப்பட துறையினர் தமிழ் படங்களை அளிப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். இத்தகைய சூழலில் மென்மேலும் தமிழ் திரைப்படங்களின்  தரத்தை உலகதரத்திற்கு உயர்த்தும் விதமாக இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளை இத்தகைய திரைப்பட விழாவை நடத்துவது பாராட்டுக்குரியது ஆகும்.

திரைப்பட கலையை பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் என்ற கல்லூரியை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரியிலிருந்து கலை பயின்று வெளியில் வரும் மாணவர்கள் தமிழ் திரையுலகத்திற்கு சிறந்த ப டங்களை வழங்கி இருக்கிறார்கள் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு, சிறந்த திரைக்கலைஞர்களுக்கு, விருதுகள் வழங்குவதோடு குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது என்பதையும் இந்தத் தருத்தணத்தில் நினைவு படுத்த வரும்புகிறேன். திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு செய்துவரும் பல்வேறு நலப்பணிகளில் ஒன்றாகக்தான் இன்றைய தினம் தொடங்கியிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்பட விழாவிற்காக அரசின் நிதியை பெற வந்தபோது தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாக உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து நல்ல முடிவை சொல்வார்கள். ஏனென்றால் திரைப்படத்துறைக்கு எல்லா விதங்களிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இன்னும் தொடர்ந்து செய்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக ஒரு சிலரின் ஆதிக்கத்திலிருந்த நமது திரை உலகத்தை மீட்டெடுத்து இன்றைய தினம் யார் வேண்டுமானாலும் திரைப்படத் துறையில் சாதிக்கலாம் என்ற ஒரு சமத்துவ நிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சர்வதேச திரைப்பட விழாக்களின் மூலமாக பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தமிழ்நாட்டில் திரைக்கலை பயிலும் மாணவர்களுக்கு காட்டும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது.  அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் சென்று வந்தார்கள். அந்த விழாவில் நமது மாணவர்கள் தாயாரித்த நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்டன. அந்த படங்களுக்கு அங்கு வந்திருந்த திரைப்படப் பார்வையாளர்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளார்கள் என்கின்ற செய்தியை இங்கே தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். இதேபோல இனிவரும் ஆண்டுகளிலும் உலக அளவில் தமிழ் திரைப்படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல பரிசுகளை வெல்ல வேண்டும். அதற்காக இந்த திரைப்பட விழா பயன்பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மென்மேலும் திரைப்பட ரசனையையும், திரைப்படக்கலையையும் வளர்ப்பதற்காக உங்களது அமைப்பு திரைப்பட விழாக்களை நடத்துவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். 2003-ம் ஆண்டிலிருந்து இந்த திரைப்பட விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2003-ம் ஆண்டில் முதல் முறையாக இந்த திரைப்பட விழாவை தொடங்கியபோதே அப்போது ஆட்சியிலிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு இந்த விழாவுக்கு ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

உலக அளவில் விருது பெற்ற 60 திரைப்படங்கள் உட்பட 154 திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட இருக்கிறது. ஏறத்தாழ 44 நாடுகளிலிருந்து திரைப்படங்கள் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கின்றன என்கிற செய்தி திரைப்படத்தை கல்வியாக பயிலுகின்ற மாணவர்களுக்கும், விஷூவல் கம்யூகேஷன் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் பெரும் ஆர்வமளிக்கும் செய்தியாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்விழா சிறப்பாக நடைபெற தமிழக அரசின் செய்தித்துறையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் சேகர் கபூர், நடிகர் சரத்குமார், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தி பேசினார்கள்.  நடிகர்கள் பார்த்திபன், வெங்கட்ராம் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். விழாவின் முடிவில் படங்கள் திரையிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்