முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டப் பேரவை ஜனவரி 18-ல் கூடுகிறது

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.30 - தமிழக சட்டப்பேரவைத் தொடர் வரும் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. புத்தாண்டில் புதிய கூட்டத்தொடர் தொடங்குவதால் முறைப்படி தமிழக ஆளுநர் ரோசையா கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 15-ம் தேதி கூடியது. அப்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேறியது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவான அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், இடைப்பட்டக் காலத்தில் 136 அடி நீர்மட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை கேரள அரசு மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும், கேரள அரசு கூறுவதுபோல, அணைப்பகுதியில் நில நடுக்கம் போன்றவற்றில் ஆபத்து ஏதும் இல்லை என்றும்,

மேலும் கேரள மாநில அரசு, அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றிய புதிய தீர்மானத்தின்படி, புதிய அணையைக் கட்டவேண்டியதில்லை என்றும், இரு மாநில மக்களுக்கும் இடையில் பதற்றத்தை உருவாக்கும் விதத்தில் தேவையற்ற பீதியையும், வதந்தியையும், உருவாக்க முயலவேண்டாம் என்றும், இதுகுறித்து மத்திய அரசு கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், அணையின் பகுதிக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்பவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங், சென்னை வந்தபோதும் முதல்வர் ஜெயலலிதா அது குறித்து பிரதமரிடம் பேசினார். இதன் விளைவாக முல்லைப் பெரியாறு விஷயமாக, பிரதமரின் தலைமையின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு நியமிக்க இருந்த நிபுணர்குழு குறித்து அறிவிப்பாணையை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இது முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். 

இச்சூழலில் அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் கட்சியை பலப்படுத்தும் முடிவுகளை முதல்வர் எடுக்க உள்ளார்.

இந்நிலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் வரும் 18-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் கூட உள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் ஆகையால் மரபுப்படி ஆளுநர் ரோசையா உரையாற்றி கூட்டத் தொடரைத் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து தமிழக சட்டப் பேரரைச் செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-

அரசியல் சட்டம் 174-வது (1)-வது விதி அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் ரோசையா, 2012-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தனது உரையுடன் கூட்டத் தொடரைத் தொடங்கி வைக்க உள்ளார் என்பதை ஆளுநர் அறிவித்துள்ளார். 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான பலப்பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்