முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டம் குறித்த கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.20 - தமிழ்நாடு முதலமைச்சரால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் மகளிருக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்கள் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நேற்று (18/08/2014) சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் , மகளிருக்கு வீட்டு பணிகளை எளிதாக்கவும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் பங்கேற்று வளம் பெற, நவீன வீட்டு உபயோக சாதனங்களை வழங்கிடும் வகையில், 30.6.2011 அன்றைய நிலையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் ஏறக்குறைய 1.85 கோடி மகளிருக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்கள் வழங்க ஆணையிட்டார்.

இத்திட்டத்தின்படி, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2011-2012 ஆம் ஆண்டில் 25 இலட்சம், 2012-2013 ஆம் ஆண்டில் 35 இலட்சம், 2013-14 ஆம் ஆண்டில் 35 இலட்சம் என இதுவரை மொத்தம் 95 இலட்சம் பயனாளிகளுக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் அவர்கள், 2014-15ஆம் ஆண்டிற்கு 45 இலட்சம் மற்றும் 2015-16ஆம் ஆண்டிற்கு 45 இலட்சம் என மொத்தம் 90 இலட்சம் விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 2014-15ஆம் ஆண்டிற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பணிகளை முடித்து விரைவில் பயனாளிகளுக்கு வழங்கிட அமைச்சர் ஆணையிட்டார்.

மேலும், இத்திட்டத்தின் இலக்கினை விரைவில் அடையும்பொருட்டு, அனைத்து மாவட்டங்களுக்கு தேவைப்படும் எண்ணிக்கை, ஒதுக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை, அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கான கிடங்குகள் பற்றிய விபரம், சேவை மையங்கள் மற்றும் பொருட்களை பயனாளிகளுக்கு விரைந்து விநியோகம் செய்தல் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் சாந்தினி கபூர், , கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் எம்.பி. நிர்மலா, , உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ். கோபாலகிருஷ்ணன்,, வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை (ம) தணிக்கும் துறை ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரதீப் யாதவ்,, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மா.சந்திரசேகரன், மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்