முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., கட்சி தலைமை: ப.சிதம்பரம் கருத்து

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக்.26 - நேரு குடும்பத்தைச் சேராதவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் நாள் வரலாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அதிகம் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்; கறுப்புப் பண விவகாரத்தில் பாஜக அரசு மீது அவர் கடுமையாக சாடியுள்ளார். தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஜெய்ப்பூர் மாநாட்டில், ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்த முடிவு சரியானதுதான்.

தலைமையைப் பொறுத்தவரை, எனது தலைமுறையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காங்கிரஸ் தலைவர் என்றால் அது சோனியா காந்திதான். இளம் தலைமுறையினரிடம் ராகுல் காந்தி பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். மற்ற தலைவர்கள் வளரக்கூடாது என்று இதற்கு அர்த்தமல்ல. காங்கிரஸ் தலைமையிடம் செயல் வழிமுறை இருக்கிறது என்பதை உறுதியாகக் கூற முடியும். காங்கிரஸ் கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு உரிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.

அதன் மூலம் உண்மையான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும். சோனியாவும் ராகுல் காந்தியும் அதிக எண்ணிக்கையிலான பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும். ஊடகங்களை அவ்வப்போது சந்திக்க வேண்டும்.

நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக முடியுமா என்று கேட்கிறீர்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒருநாள் அதுவும் நடக்கும். ஆனால், அது எப்போது நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. காலவரையறை கூற முடியாது. எதன் மீதும் விருப்பம் கொள்வதற்கு எனக்கு அதிக வயதாகிவிட்டது.

காங்கிரஸ் கட்சியினரிடம் ஒழுங்கும் கட்டுப்பாடும் குறைவுதான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதனை மேம்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது" என்றார் ப.சிதம்பரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்