முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அரசை பினாமி அரசு என்று கூறுவதா? கருணாநிதிக்கு கண்டனம்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை – தி.மு.க ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்ல இயலும்? அன்றும், இன்றும், எங்களது அரசு ஒரு பெரும்பான்மை, அதாவது, மெஜாரிட்டி அரசு தான் என்று. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்..

சட்டசபையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தி.மு.க. நடந்தால்  அதற்குரிய பலனை அவர்கள் பெறுவார்கள் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்தார்.
முந்தைய தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொன்னது ஏன் என்பது பற்றி பல்வேறு புள்ளிவிவரங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
காழ்ப்புணர்ச்சியால் இன்று அண்ணா தி.மு.க. அரசை பினாமி அரசு என்று கூறுவதா என்று கருணாநிதிக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தி.மு.க. தலைவர்  கருணாநிதியும், தலைவர் பதவிக்கு, இலவு காத்த கிளியாய் காத்துக் கொண்டிருக்கும் தனயன் மு.க.ஸ்டாலினும்  தற்போது நடைபெற்று வரும் அண்ணா தி.மு.க. அரசை, பினாமி அரசு என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.
புரட்சித் தலைவி அம்மா, தமிழக மக்களின் நலன் காக்க எடுத்த நடவடிக்கைகளும், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு,  தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளினாலும் ஏற்பட்டுள்ள பதற்றம், தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல்களில் ஏற்பட்டு வரும் உட்கட்சிப் பூசல், தனது தனயனே இல்லை என்று  கருணாநிதியால் தலைமுழுகப்பட்டு  விட்ட ஸ்டாலினின் தமயன்  அழகிரி, தி.மு.க. விரைவிலேயே தேட வேண்டிய சூழ்நிலைக்கு சென்று விடும்”  என்று கூறிவிட்ட கசப்பான உண்மை ஆகியவற்றால்  ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக இந்த அரசை ‘பினாமி அரசு’ என்று  கருணாநிதியும்,  ஸ்டாலினும் கூறி வருகிறார்கள்.
குழப்பங்கள் சற்று தெளிந்தவுடன், ‘ஓ’ என்ற எழுத்துக்கும், பூஜ்யம் என்ற எண்ணுக்கும் இடையே இருந்த குழப்பம் எவ்வாறு தீர்ந்ததோ, அதே போல இந்தக் குழப்பமும் தீர்ந்து விடும் என நான் நம்பியிருந்தேன்.
ஆனால் ‘பினாமி அரசு’ என்னும் சொற்றொடர் குழப்பம்  கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இன்னமும் தீரவில்லையென்பதால், இதுபற்றிய விளக்கத்தை அளிப்பது எனது கடமையெனக் கருதுகிறேன்.

தனது கேள்வி பதில் அறிக்கையில் கருணாநிதி, அண்ணா தி.மு.க.வினர்,  ‘‘தி.மு.க. அரசை மைனாரிட்டி தி.மு.க. அரசு” என்று இன்று வரை அழைத்ததற்கு, தற்போதுள்ள அண்ணா தி.மு.க. அரசை பினாமி அண்ணா தி.மு.க. அரசு” என்று தி.மு.கழகத்தினர் அழைத்து வருகிறார்கள்.  ஆனால் பினாமி அண்ணா தி.மு.க. அரசு என்பது எவ்வாறு பொருந்துகிறது? ” -என தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு, ‘‘பினாமி” என்றால் உரிமை கொண்டாட ஒருவர் இருப்பார்; உண்மையான உரிமை வேறோருவரிடம் இருக்கும்.  தமிழகத்தில் தற்போதுள்ள முதலமைச்சர் அப்படித்தானே இருக்கிறார். முதலமைச்சர் தான் அப்படி என்றால், நிர்வாகத்திற்குத் தலைமையேற்று நடத்த வேண்டியவர் தலைமைச் செயலாளர்.  தற்போது தலைமைச் செயலாளர் பெயருக்குத் தான் இருக்கிறாரே தவிர, அதிகாரம் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்து தற்போது ஆலோசகராக இருப்பவரிடம் தான் உள்ளது.  அதுபோலத் தான், காவல்துறையைப் பொறுத்தவரை டி.ஜி.பி.தான் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.  தற்போது அந்தத் துறையிலும் ஆலோசகர் ஒருவர் வந்துவிட்டார்.  எனவே ‘பினாமி அரசு’ என்பது பொருத்தமாகத்தானே உள்ளது. -என பதில் கூறி உள்ளார்.
இதிலிருந்தே குடும்ப சண்டை சச்சரவு, குடும்பத்தினர் மீது உள்ள ஊழல் வழக்குகள், கட்சியினரிடையே உள்ள கோஷ்டிப் பூசல் ஆகியவற்றின் காரணமாக கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தின் காரணமாகத் தான் அவர், இந்த அரசை பினாமி அரசு என்று கூறியுள்ளார் எனத் தெளிவாகிறது.

பினாமி என்பதன் பொருள் வரையறை,  “a sale or purchase made in the name of some one other than the actual vendor or purchaser”  என்பதாகும்.  அதாவது உண்மையான விற்பனையாளர் அல்லது வாங்குபவர் அல்லாது வேறு ஒருவரின் பெயரில் செய்யப்படும் விற்பனை அல்லது வாங்குதல் என்பதாகும். எனவே, ‘பினாமி’ என்பதன் பொருள் என்ன என்பதை  கருணாநிதி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.  அரசு என்பதும், முதலமைச்சர் பதவி என்பதும் உரிமை பற்றியது அல்ல; அது கடமை பற்றியது என்பது கடமை உணர்வு உள்ளவர்களுக்குத் தான் புரியும்.  கருணாநிதி அதிகாரத்தைப் பற்றி அதாவது அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது பற்றி தனக்கு கற்பனையாகத் தோன்றியுள்ளதை தெரிவித்துள்ளதால், அவர் ‘de facto’ மற்றும் ‘de jure’ என்று உள்ள சொற்களைத் தான் இவ்வாறு குழப்பமாக பயன்படுத்தியுள்ளார் போலும்!  கருணாநிதிக்கு  வழக்கமாக ஏற்படும் பல வகை குழப்பங்களில் இதுவும் ஒன்று.  எனவே தான், ஆலோசகர்களிடம்  அதிகாரம் இருப்பதாக தனது அறிக்கையில் கற்பனை செய்துள்ளார்.  ஆலோசகருக்கு உள்ள கடமைகள் வேறு; தலைமைச் செயலாளருக்கு உள்ள கடமைகள் வேறு; காவல் துறை தலைமை இயக்குநருக்கு உள்ள கடமைகள் வேறு; இந்த வித்தியாசங்கள் எல்லாம் தெரியாவிட்டால் இது போன்று  தன்னையும் குழப்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்ப எத்தனிக்கவேண்டும் தான்!
பினாமி என்றால் என்ன?
தலைமைச் செயலாளர் என்னென்ன கோப்புகளைப் பார்க்க வேண்டும்? முதலமைச்சருக்கு கோப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்பது பற்றியெல்லாம் அரசின் அலுவல் விதிகள் மற்றும் தலைமைச் செயலகப் பணி விவரங்கள்  ஆகியவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆலோசகர் என்பவர் அரசுக்கும்,  முதலமைச்சருக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளில் ஆலோசனை வழங்குபவர் ஆவார். அரசின் கோப்புகளை ஆலோசகர் பார்ப்பதும் இல்லை.  அதில் கையெழுத்து இடுவதும் இல்லை.  முதலமைச்சராக இருந்த போது இதைப் பற்றி அவர் கேட்டு தெரிந்திருந்தால் இது போன்ற ஒரு ஐயப்பாடு எழ வாய்ப்பில்லை.
மத்திய அரசிலும் ஆலோசகர் பதவி இருப்பது  கருணாநிதிக்கு தெரியுமா? தெரியாதா?  தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஆலோசகர் என்ற பதவிகள் இருந்தனவே.  அமைச்சரவையின் செயலாளர் அதாவது Cabinet Secretary  என்பவர் தான் இங்கே தலைமைச் செயலாளர் போன்று அரசின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்.  அப்படியென்றால், அமைச்சரவை  செயலர் அதிகாரம் இல்லாதவராகவும், ஆலோசகர் அதிகாரம் உள்ளவராக, பினாமியாக இருந்தார் என  கருணாநிதி தெரிவிக்க விரும்புகிறாரா?  அதே போன்று, பாதுகாப்பு செயலாளர் என்பவர் மத்திய அரசில் பாதுகாப்பு குறித்த மிக உயர்ந்த அதிகாரி ஆவார்.  அப்படி என்றால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதாவது, National Security Adviser என்பவர் பினாமி அதிகாரி என்று  கருணாநிதி சொல்கிறாரா??
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 1989–ம் ஆண்டு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  குகனை ஆலோசகராக நியமித்தாரே? அது எந்த அடிப்படையில் என்று  கருணாநிதி விளக்குவாரா? அப்போது பினாமி அடிப்படையில் ஆலோசகர் பதவி ஏற்படுத்தப்பட்டது என்று  கருணாநிதி சொல்கிறாரா? என்பதை அவர் தான் விளக்க வேண்டும். தன்னால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் தெரிவித்த ஆலோசனையின் பேரில் குடும்ப அட்டைகள் பெறத் தகுதியுடையவர்களை நிர்ணயிக்க கணக்கெடுப்பு படிவம் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் ஏற்பட்ட பிரச்சனைகளையெல்லாம்  கருணாநிதி மறந்திருந்தால், அது பற்றி நினைவில் வைத்திருக்கும் அவரது கட்சியினரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
30.11.1997 அன்று ஏ.கே.வெங்கட் சுப்ரமணியன் என்ற ஐஏஎஸ் அதிகாரி ஓய்வு பெற்றவுடன் 1.12.1997 முதல் முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அலுவலராக மறுபணி நியமனம் செய்யப்பட்டு 9 துறைகளின் பணிகளை மேற்பார்வை  மற்றும் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார்.  துறைகளின் பணிகளை மேற்பார்வை மற்றும் ஆய்வு செய்வது தலைமைச் செயலாளரின் பணி தானே! அப்படியென்றால் சிறப்புப் பணி அலுவலர் என ஒரு பினாமி பதவியை  கருணாநிதி ஏற்படுத்தினாரா?

கே.ஏ.சுந்தரம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒய்வு பெற்ற பின், அவரை Officer on Special Duty, அதாவது சிறப்புப் பணி அலுவலராக நியமனம் செய்தாரே  கருணாநிதி, அதுவும் பினாமி பதவியா?
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  கே.லெட்சுமி காந்தன் பாரதியை 1998ல் முதலமைச்சர் அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பணிகள்; மக்கள் நலப் பணியாளர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பணியாற்றிட ஒருங்கிணைப்பாளராக, அதாவது, Co-ordinator  என  நியமனம் செய்து  கருணாநிதி ஆணை வெளியிட்டாரே? அப்படியெனில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு பினாமியாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது என்று சொல்கிறாரா  கருணாநிதி?
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தன என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர்.  கருணாநிதியும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், ஒவ்வொரு அதிகார மையங்களாக செயல்பட்டார்கள் என்பதும், இந்த அதிகார மையங்கள் காவல் துறையினருக்கே பல்வேறு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பித்தன என்பதும் நாடறிந்த உண்மை.  அவ்வாறு  கருணாநிதி ஆட்சி நடத்தியதால் தான் தமிழக மக்கள் தி.மு.க.வை தூக்கி எறிந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.  கருணாநிதியின் ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்ததால் தான் அதே நினைவில் தற்போதும் அதிகாரங்கள் பற்றி  கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
தனது தனயனுக்காக  கருணாநிதி உருவாக்கிய துணை முதல்வர் என்ற பதவி  இந்திய அரசமைப்புச் சட்டத்திலோ, அரசின் அலுவல் விதிகளிலோ இல்லையே?  அப்படியென்றால் பினாமி முதல்வராக  ஸ்டாலினை  கருணாநிதி நியமித்தாரா? மூத்த அமைச்சர்  க.அன்பழகன் கோப்புகளைப் பார்த்தபின் துணை முதல்வருக்கு கோப்புகள் சமர்ப்பிக்கப்படுவது பற்றி  பிரச்சனை ஏற்பட்டு, சமாதான நடவடிக்கையாக நிதியமைச்சர் பார்க்க வேண்டிய கோப்புகளை துணை முதல்வர் பார்த்தபின் நிதியமைச்சருக்கு அனுப்பப்படலாம் என்ற வேடிக்கை உத்தரவை பிறப்பித்தவர் தான்  கருணாநிதி.
2006–ம்  ஆண்டு தி.மு.க. ஆட்சியமைத்த போது 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 96 தான்.
234 உறுப்பினர்களில் பாதி எண்ணிக்கை 117 ஆகும்.  எனவே, தனியாக ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்றால் அந்த கட்சிக்கு 118 உறுப்பினர்களாவது இருத்தல் வேண்டும். அப்போது தான்  அதனை ஒரு மெஜாரிட்டி அரசு என்று கூற இயலும்.
118 என்ற எண்ணிக்கைக்கு, மற்ற கட்சிகளுடன் அவை கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவைகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டால் அதை கூட்டணி ஆட்சி என்று கூறலாம்.  ஆனால் வெறும்  96 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்ட தி.மு.க ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்ல இயலும்? மைனாரிட்டி அரசு என்பதற்கான விளக்கம் பற்றி  கருணாநிதிக்கும், தி.மு.க.விற்கும் இன்று வரை புரியாததால் தான் மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று நாங்கள் குறிப்பிடுவதை பற்றி வருத்தப்படுகிறார்கள்; கோபப்படுகிறார்கள்.
2006ல் அமைக்கப்பட்ட தி.மு.க. அரசு ஏன் மைனாரிட்டி அரசு என்று புரட்சித் தலைவி அம்மா  2006 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் நடைபெற்ற திருத்திய வரவு செலவு திட்ட பொது விவாதத்தின் போது மிகக் தெளிவாகக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  அந்த விவாதத்தின் போது மொத்தம் உள்ள 234 இடங்களில்
163 இடங்களைப் பெற்றிருக்கிற கூட்டணி ஆட்சி என  க.பொன்முடி தந்திரமாக சொல்லி தப்பிக்க முயன்ற போது, புரட்சித் தலைவி அம்மா, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சியில் பங்கு கொண்டிருந்தால், கூட்டணி அரசாக அது இருந்திருந்தால் தான் கூட்டணி அரசு என்று சொல்ல முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்.  கூட்டணி அரசாகவும் இல்லாமல், தனியே வெறும் 96 உறுப்பினர்களை கொண்டு ஆட்சியமைத்து, 34 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆட்சி நடத்திய திமுக, மைனாரிட்டி அரசு தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் எழுந்ததில்லை.

அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற போது அண்ணா தி.மு.க.வின் உறுப்பினர்கள் 150 பேர். இன்றைக்கும் அ.தி.மு.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 151.  அன்றும், இன்றும், எங்களது அரசு ஒரு பெரும்பான்மை, அதாவது, மெஜாரிட்டி அரசு தான். அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்றத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்னையும், அண்ணா தி.மு.க. அரசையும், பினாமி அரசு என்று கூறுவது காழ்ப்புணர்ச்சியால் தான் என்பது எவருக்கும் எளிதில் புரிந்து விடும்.
மு.க.ஸ்டாலின் ஒரு விழாவில் பேசும் போது, வழக்கம் போல எதிர்கட்சிகளை வெளியே தூக்கிப் போடாமல், மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கிடைக்கும் என்று தான் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார்.  எதிர்கட்சிகளுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களது வாதங்களை கேட்டு, அவர்களது வினாக்களுக்கு தகுந்த பதில் அளிப்பது; எதிர்கட்சியினரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பின், அவற்றை ஏற்றுக் கொள்வது; என்ற மிக உயர்ந்த ஜனநாயக கோட்பாட்டில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் புரட்சித் தலைவி அம்மா.  எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் நியாயமான ஆலோசனைகளை வழங்கியபோது சிறிதும் தாமதிக்காமல் உடனேயே அவற்றை ஏற்றுக் கொள்வதாக பல நேரங்களில் புரட்சித் தலைவி அம்மா அறிவித்துள்ளார்.  சட்டமன்றத்திற்கு வருவதே குழப்பம் விளைவிப்பதற்கும், சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதற்கும், பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதற்கும், சட்டப் பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன் அமர்ந்து போராடுவதற்கும்,  சட்டப் பேரவைத் தலைவரின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் மற்ற உறுப்பினர்களை பேச விடாமல்,  இடையூறு ஏற்படுத்தி கூச்சல் குழப்பம் விளைவிப்பதற்கும் தான் என்ற அடிப்படையில் செயல்படும்  தி.மு.க. உறுப்பினர்களை சட்டப் பேரவைத் தலைவர் வெளியேற்றாமல், சட்டமன்றத்தை எவ்வாறு நடத்த இயலும்? சட்டமன்றத்தின் மற்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது எங்ஙனம்?  சட்டமன்றத்திற்கே வராத  கருணாநிதி தவிர்த்து எஞ்சிய தி.மு.க.வின்  22 உறுப்பினர்கள் சட்டமன்றத்தின் மாட்சிமையையே பிணையத்திற்கு உள்ளாக்கும் போது சட்டமன்றத்தின் மாட்சிமையை மீட்டு எடுக்க வேண்டியது சட்டப் பேரவைத் தலைவரின் கடமை அல்லவா?
எச்சரிக்கை
தற்போது நான் விரிவாக அளித்துள்ள விளக்கத்தை  கருணாநிதியும்,  மு.க.ஸ்டாலினும் நன்கு படித்து புரிந்து கொண்டால் அண்ணா தி.மு.க. அரசு, பெரும்பான்மை அரசு, அதாவது மெஜாரிட்டி அரசு என்பது புரிய வரும்.  சட்டப் பேரவையில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப விவாதங்களில் பங்கு பெற்றால்,     சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.  அவ்வாறு இல்லாமல் மற்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், சட்டப் பேரவையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், தி.மு.க.வினர் நடந்து கொண்டால் அதற்குரிய பலனைத் தான் அவர்கள் பெறுவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து